ETV Bharat / state

வேகமாகப் பரவும் இன்புளூயன்சா ஃபுளூ.. இணை நோய் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 5:19 PM IST

Updated : Nov 23, 2023, 7:51 PM IST

Etv Bharat
Etv Bharat

கொரோனா தொற்றின் பரவல் போலவே மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இன்புளூயன்சா ஃபுளூ வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள காவேரி மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் விஜயலட்சுமி வழங்கிய அறிவுறுத்தல்களைப் பார்க்கலாம்.

விஜயலட்சுமி, காவேரி மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர்

சென்னை: குளிர் காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தொண்டையில் வலி, இருமல், பசியின்மை, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர்வடிதல், தும்மல், தொடர்ந்து தலைவலி, உடல் முழுவதும் தசை தசையாகக் கடுமையான வலி, சில நேரங்களில் வாந்தி அல்லது பேதி, உடல் களைப்பு, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா? உங்களுக்கு இன்புளூயன்சா ஃபுளூ காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் பிரிவு மருத்துவர் விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

பருவ மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கூறியுள்ள அவர், முன்பு கூறிய அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஈடிவி பாரத் இணையதளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்த காவேரி மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு மருத்துவர் விஜயலட்சுமி, மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்த் தொற்று பரவல் என்பது அதிகமாகத்தான் இருக்கும் எனவும் இந்த சூழலில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யத் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்புளூயன்சா வைரஸ் பொதுவாக நான்கு வகை உள்ளன. A வகை வைரஸ், B வகை வைரஸ், C வகை வைரஸ், மற்றும் D வகை வைரஸ். இதில் உள்ள A மற்றும் C ஃபுளூ வகை வைரஸ்கள் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்குக் காரணமாக அமைகிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், A வகை கிருமிகளில் இருந்து பிரிந்து மாற்றம் பெரும் H1 N1 மற்றும் H3 N2 வகை காய்ச்சல்கள், கால நிலை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும் எனவும் மருத்துவர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் இந்த வகை தொற்றுகள் இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவவும் செய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது மிக அவசியமானது என மருத்துவர் விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

இணை நோய் உள்ளவர்களைப் பாதிக்கும் இன்புளூயன்சா ஃபுளூ: பொதுவாக நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடுடன் காணப்படுவார்கள். இவர்களுக்குப் பருவ காலங்களில் வரும் இன்புளூயன்சா ஃபுளூ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி விடும். மேலும் அவர்கள், ஆரோக்கியம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அளவுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் பிரிவு மருத்துவர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இவர்கள், புளூயன்சா ஃபுளூ அறிகுறிகள் தென்பட்டால் கால தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை பெற்றுப் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நோய்த் தொற்று தொண்டைப் பகுதியில் இருந்து, நுரையீரல் வரை சென்று நிமோனியா காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குழந்தைகளைப் பாதிக்கும் இன்புளூயன்சா ஃபுளூ: பொதுவாகக் குழந்தைகள் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். அது மட்டும் இன்றி இந்த பருவ மழைக் காலத்தில் பள்ளி சென்று வரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.

இதன் காரணமாக ஒரு குழந்தையிடம் இருந்து இருமல் மற்றும் தும்மல் வழியாக மற்ற குழந்தைக்குத் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. மேலும், குடிக்கும் தண்ணீர், கைகளைச் சுத்தமாகக் கழுவாமல் உணவு உட்கொள்வது போன்ற செயல்களாலும் குழந்தைகள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் குழந்தைகளைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

  • பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முக கவசம் அணிவித்து விடுங்கள்
  • தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆர வைத்து சில்வர் பாட்டிலில் ஊற்றிக் கொடுத்து அனுப்புங்கள்
  • சேனிடைசரை பள்ளி செல்லும் போது பைகளில் வைத்து அனுப்புங்கள்
  • கைகளைக் கழுவுவது மட்டும் இன்றி, சேனிடைசர் கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய அறிவுறுத்துங்கள்
  • உங்கள் குழந்தைக்கு நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்பி வைப்பதைத் தவிருங்கள்
  • நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்வதுடன் குழந்தைகளையும் சாப்பிட வையுங்கள்
  • உணவைச் சூடாக மட்டுமே உட்கொள்ள வேண்டும்

நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள்: மருத்துவரின் அறிவுறுத்தல் படி மருந்து மாத்திரைகளைச் சரிவர எடுத்துக்கொள்வதுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் ஓய்வு மிக அவசியமான ஒன்று என மருத்துவர் கூறியுள்ளார். மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் இருக்கும்போதும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த மருத்துவர் விஜயலட்சுமி, இளைஞர்களைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யாத இன்புளூயன்சா ஃபுளூ வைரஸ் காய்ச்சல், நீரிழிவு நோய், ஆஸ்துமா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் உள்ளிட்ட பல இணை நோயாளிகளையும் வீட்டில் உள்ள வயதான நபர்கள் மற்றும் குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கும் எனத் தெரிவித்தார். இதற்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் தொற்று பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனால் புற்றுநோயா?... பெற்றோர்களே உஷார்...

Last Updated :Nov 23, 2023, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.