ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு முடிவுகள் வெளியிட கோரி மாணவர் சங்கம் போராட்டம்!

author img

By

Published : Aug 15, 2023, 6:31 AM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கான இறுதிப் பருவ தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என துணைவேந்தர் கௌரி தெரிவித்தார்.

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளன. இதனால் அவர்கள் முதுகலை படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆய்வு மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி மிருதுளா கூறுகையில், "சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயின்று வரும் இளநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதேபோல் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ஆய்வுப்படிப்பைச் சமர்ப்பிப்பதற்கான பிற கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள், தங்களது ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே, இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய பொழுது கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், அதனை மீறி தற்பொழுது கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்" என தெரிவித்தார்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரியிடம் கேட்ட பொழுது, "இளநிலை படித்த மாணவர்களுக்குக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முன்கூட்டியே வெளியிடுவதற்கு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான சிஏ பயிற்சி முடிப்பதற்கு காலதாமதமானதால் தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டது. தற்பொழுது மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாவதால் முதுகலை படிப்பில் சேருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஐந்தாம் பருவ தேர்வு முடிவுகளை வைத்து மாணவர்களைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ. 87.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.