ETV Bharat / state

தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்வு - அமைச்சர் ஐ.பெரியசாமி

author img

By

Published : Mar 30, 2023, 9:25 PM IST

Dept of Rural development
ஊரக வளர்ச்சித்துறை

தமிழ்நாட்டில் 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவையாவன:-

*விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் ரூ.1500 கோடி மதிப்பில் கால்வாய்கள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் செய்து தரப்படும்.

* ரூ.1,000 கோடியில் தனி நபர் மற்றும் சமுதாய சொத்துகள் உருவாக்கப்படும்

* ஊரகப் பகுதிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

* தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் 70 லட்சம் மரக்கன்றுகள் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்படும்.

* ஊரகப் பகுதிகளில் ரத்த சோகையை குறைக்கும் பொருட்டு 21 லட்சம் முருங்கை கன்றுகள் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வளர்க்கப்பட்டு, 10 லட்சத்து 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

* ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 13 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-லிருந்து ரூ.5000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவு வேளாண்மை வசதிகளை அருகில் உள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட ஒரு சிறப்புத் திட்டம் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பீடு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2043 புதிய சத்துணவுக்கூடங்கள் 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

* அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒரு சிறப்புக் குழு அமைத்து உள்ளூர் மயமாக்கல் மூலம் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கினை அடைய 200 கோடி ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும்.

* ஊரக வளர்ச்சித் துறையின் பணிகளை அனைத்து நிலையிலும் சீரிய முறையில் கண்காணிக்க தொடக்கம் முதல் முடிவு வரை கணினி மயமாக்கல் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு ஏதுவாக மூன்று கோடியே 88 லட்சம் செலவில் காணொலி காட்சி வசதிகள் 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்படும்.

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசினை குறைக்கும் வகையில் 1500 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக சாலைகள் அமைக்க 500 மெட்ரிக் டன் நெகிழி கழிவுகள் பயன்படுத்தப்படும்.

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் திட்டப்பணிகளை திறம்பட கண்காணிக்க 274 புதிய வாகனங்கள் 20 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - விழுப்புரம் கொலை சம்பவத்தைக் கண்டித்த ஈபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.