சென்னையில் ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னையில் ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் ஐடி ரெய்டு!
IT Raid in chennai: சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரது வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஜவுளி நிறுவன அதிபர் நீலகண்டன் என்பவரது வீட்டில், பெங்களூரில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் மணல் குவாரி உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், ஜவுளி நிறுவன அதிபர் நீலகண்டன். இவரது வீட்டில் இன்று (நவ.16) காலை முதல் பெங்களூரில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நீலகண்டன் மீது வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு ஒன்று உள்ளது. அது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், நீலகண்டனுக்குச் சொந்தமான கே.கே.நகர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கே.கே,நகரில் உள்ள நீலகண்டன் வீட்டில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில்தான் எதற்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது, என்ன வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
