JEE தேர்வு தேவையில்லை..! ஐஐடி மெட்ராசில் 4 ஆண்டு இளங்கலை அறிவியல் படிப்பு அறிமுகம்!

author img

By

Published : Mar 6, 2023, 1:36 PM IST

IIT
IIT ()

சென்னை ஐஐடி, எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்தில் நான்காண்டு இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் படித்த அனைத்து மாணவர்களும் வயது வேறுபாடின்றி இந்த பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் சேரலாம்.

சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்தில் நான்காண்டு ஆன்லைன் இளங்கலை அறிவியல் (BS) பட்டப்படிப்பைத் தொடங்கி உள்ளது. மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் இந்தியாவை உலகளாவிய மையமாக உருவாக்குவதற்கான இந்தியா செமிகண்டக்டர் மிஷன்-உடன் இந்தப் பாடத்திட்டம் இணைந்து செயல்படுகிறது.

இது ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ள இரண்டாவது பி.எஸ். பட்டப்படிப்பாகும். ஏற்கனவே டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் பி.எஸ். பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 17,000-க்கும் அதிகமான மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, "ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திற்கான பி.எஸ். பட்டப்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அணுகக்கூடியதாக ஐஐடி கல்வியை மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன், பி.எஸ். படிப்பிற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி இருப்பதை உறுதிசெய்யும் வகையில் எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்ப வருமானம் உடையவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாடத்திட்டத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் மோட்டார் வாகனங்கள், செமிகண்டக்டர், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட தொழிற்சாலைகளில், எலக்ட்ரானிக் சிஸ்டர் டிசைனர், எம்பெடட் சிஸ்டம் டெவலப்பர், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஸ்பெஷலிஸ்ட், சிஸ்டம் டெஸ்டிங் இன்ஜினியர், எலக்ட்ரானிக்ஸ் ரிசர்ச் இன்ஜினியர் போன்ற பணிகளுக்கு செல்லலாம்.

எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்தில் விருப்பமுள்ள எவரும் வயது வேறுபாடின்றி பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் சேரலாம். விண்ணப்பதாரர் 12ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகியவற்றை பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜே.இ.இ. தேர்வின்றி நடத்தப்படும் இந்த பாடத் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு 4-வார தகுதிச் செயல்முறை கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நான்கு வாரங்களுக்கான பாடங்கள் ஐஐடி ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். முழுக்க முழுக்க அந்தப் பாடங்களின் அடிப்படையில் மட்டுமே தகுதித் தேர்வு நடைபெறும். இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் விவாத அரங்குகள், நேரடி வகுப்புகள் போன்றவையும் நடத்தப்படும்" என்று கூறினார்.

இப்படிப்பின் தனிச்சிறப்பு குறித்து பேசிய காமகோடி, "தற்போதைய உலக சூழ்நிலையில் மின்னணுவியல் துறையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள் உள்ளிட்ட இயக்கத் தீர்வுகள், வழக்கமான இயந்திர வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். எனவே, தொழில்துறை தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், திறன் மேம்பாட்டுக்கும் மின்னணுத் துறையில் அடிப்படைக் கல்வி மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டுதான், ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் லட்சியங்கள் ஈடேறுவதுடன் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்.

பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் அனுப்பப்பட்டாலும், இப்பாடத்திட்டத்தின் தரத்தையும், கடுமையையும் உறுதி செய்யும் வகையில் கேள்வி-பதில்கள், தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையிலேயே நடத்தப்படும். அதேபோன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் தகுதித் தேர்வுகளையும் நேரில் வந்து எழுத வேண்டும். இந்த பாடத்திட்டத்தில் சேர நுழைவுப்பயிற்சி எதுவும் தேவையில்லை. அதிகபட்ச மாணவர்கள் எண்ணிக்கை என வரம்பு நிர்ணயிக்கப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் அனைவரும் இதில் சேர்ந்து படிக்க முடியும்" என்று கூறினார்.

இத்தகைய படிப்புகளின் அவசியத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளரும், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை ஆசிரியருமான பேராசிரியர் பாபி ஜார்ஜ் கூறும்போது, "எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் துறையைப் பொறுத்தவரை திறமையும், அறிவும் மிக்க பணியாளர்களுக்கு அதிகளவில் தேவை இருந்து வருகிறது. இதனை மனதில் கொண்டுதான், தொழில்துறை முன்னணியினரைக் கலந்தாலோசித்து இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தில் பட்டதாரிகளாக வெளிவருவோருக்கு வலுவான அடிப்படைத் தகுதிகள் இருப்பதுடன், தொழில்துறைக்கு உரிய திறன்களைப் பெற்றிருப்பார்கள் என்பதால் வேலைவாய்ப்புகளும் உறுதிசெய்யப்படும்" என்று குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும், பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். முதலில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்து கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதேபோல் வேறு ஏதேனும் பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் (யுஜிசி-யின் தற்போதைய வழிமுறைகளுக்கு உட்பட்டு), தொழில்துறையில் பணிபுரிவோரும் இதில் சேர்ந்து தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கருத்தியல் மற்றும் ஆய்வகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இதன் பாடங்களை ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கற்பிக்க உள்ளனர். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பதிவு செய்யப்பட்ட வீடியோ விரிவுரைகள், படிப்பதற்கான பாடங்கள், வாராந்திர மதிப்பீடுகள், பயிற்சிகள், சந்தேகங்களைத் தீர்க்கும் அமர்வுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். ஆய்வக வகுப்புகளுக்காக ஒவ்வொரு செமஸ்டருக்கும் சுமார் இரண்டு வாரங்கள் ஐஐடி மெட்ராஸ்-க்கு மாணவர்கள் கட்டாயம் நேரில் வரவேண்டியிருக்கும். இப் பாடத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களை study.iitm.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி புது முயற்சி: 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.