ETV Bharat / state

"தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து அழைப்புகள் வந்தன" - சிராக் பாஸ்வான்!

author img

By

Published : Mar 6, 2023, 3:38 PM IST

siraj
siraj

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தொடர்ந்து அழைப்புகள் வந்ததாலேயே தான் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், பீகார் மக்கள் தமிழ்நாட்டில் அச்சமின்றி பணிபுரிய தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் அண்மையில் வெளியாகின. இதனால் வடமாநிலத் தொழிலாளர்களிடையே பதற்றம் நிலவியது. அச்சமடைந்த பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது. இதுதொடர்பாக பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இன்று(மார்ச்.6) சென்னைக்கு வருகை தந்தார். சென்னையில் பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் பீகார் மாநிலத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். பின்னர், பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன். பீகார் மாநிலத்தில் இருந்து அதிகப்படியான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர், இந்த நிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது மிக வேதனையை அளிக்கிறது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எங்கள் மக்களுக்கு முறையான வேலை வாய்ப்பு அளித்திருந்தால், மாநிலம் விட்டு மாநிலம் வர வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்புபவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீகார் மக்கள் தமிழ்நாட்டில் அச்சமின்றி பணிபுரியத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மாநிலத்தைச் சார்ந்த மக்கள் கூறுவதை நான் முழுமையாக நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் வேலை பார்த்து வரும் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டும், குறுஞ்செய்தி மூலமாகவும் அழைத்து, தமிழ்நாட்டில் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளியுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டது உண்மை என எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததன் பேரிலேயே இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்குதல் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆளுநரிடம் வழங்க உள்ளேன்.

பீகாரில் தவறான நிர்வாகத்தின் காரணமாக, தொழிலாளர்கள் மற்ற மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர். முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இன்னலுக்கு ஆளாகின்றனர்" என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும், தன்னை சந்திக்க வந்திருந்த வடமாநிலத் தொழிலாளர்களை சந்தித்த சிராக் பாஸ்வான், அவர்களுடன் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: "சீமான், பாஜக தான் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு காரணம்" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.