ETV Bharat / state

'நான் மட்டும் முதல்வனாக இருக்க விரும்பவில்லை; அனைவரும் முதல்வனாக இருக்க வேண்டும்' - முதலமைச்சர்

author img

By

Published : May 25, 2022, 5:56 PM IST

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவைத் தொடங்கி வைத்து சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

நான் மட்டும் முதல்வனாக இருக்க விரும்பவில்லை, அனைவரும் முதல்வனாக இருக்க வேண்டும் - முக ஸ்டாலின்
நான் மட்டும் முதல்வனாக இருக்க விரும்பவில்லை, அனைவரும் முதல்வனாக இருக்க வேண்டும் - முக ஸ்டாலின்

சென்னை: ராணி மேரி கல்லூரியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 25) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான முதல் 'இளைஞர் திறன் திருவிழா'- வைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் அரங்குகளைத் திறந்து வைத்து விற்பனை பார்வையிட்டதுடன், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும், 608 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக காய்கறி, பழ வியாபாரம், மளிகைக்கடை, சிறு பெட்டிக்கடை, தையல் நிலையம் போன்ற தொழில்கள் நடத்துவதற்கு 25.66 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், '1915ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் மகளிர் கல்லூரி ஆக ராணி மேரி கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தக் கல்லூரியை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சார்பில் நான் போராட்டம் நடத்திய மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அன்று இரவே என்னை காவல் துறையினர் கைது செய்தனர். என் வாழ்நாளில் அது மறக்க முடியாத சம்பவம்.

இளைஞர்களின் வளர்ச்சியைப் பொறுத்து தான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் இருக்கும். இளைஞர்களுக்கு நிறைவான வாழ்க்கையை அமைத்து தருவதன் மூலமாக நாட்டிற்குத் தேவையான முழுமையான உழைப்பை இளைஞர்கள் தருவார்கள். இளைஞர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக விளங்கி கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் பேச்சு

10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக கடந்த 2010ஆம் ஆண்டே 'தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம்' மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. தற்போது இளைஞரின் திறனை மேம்படுத்துவதற்கு ’நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. நான் மட்டும் முதல்வனாக இருக்க விரும்பவில்லை, அனைவரும் முதல்வனாக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்க புதிய நிறுவனங்கள் பல தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய திறன் மேம்பாட்டுப்பயிற்சி வழங்க, ’நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டது. ’நான் முதல்வன்’ திட்டத்தில் வருடத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

மாநிலத்தின் திறன் போட்டிகளில் தேசிய அளவில் தமிழ்நாட்டில் 32 பேர் பங்கேற்றதில் 23 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். அதிக பதக்கங்களை தமிழ்நாடு வெல்வது இதுவே முதல் முறையாகும். இளைஞர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ’திராவிட மாடல் அரசு’ என்றும் முன்னோடியாகத் திகழும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.