ETV Bharat / state

எல்.முருகன் பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 12:36 PM IST

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

Minister SekarBabu: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதாகவும், போதுமான அறிவிப்பு பலகைகள் இருப்பதாகவும் கூறிய அமைச்சர் சேகர்பாபு, இணை அமைச்சர் எல்.முருகன் பேருந்து நிலையம் பற்றி குறை கூறினால், அதை சரி செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது பேருந்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணி ஒருவரிடம், இங்கு முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா?, போதுமான பேருந்துகள் உள்ளனவா என கேட்டார். மேலும் மாநகரப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிக அளவிலான பயணிகள் வருவதால், எப்பொழுதும் கழிவறையை சுத்தம் செய்யவும், சுத்தம் செய்வதற்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்கவும், மாநகரப் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கும், விரைவுப் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கும் இடையே உள்ள சுவர் இடிக்கப்பட்ட நிலையில், படிக்கட்டுகள் மற்றும் நகரும் மின் படிக்கட்டுகள் (Escalator) போன்றவற்றை விரைவாக அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பயணிகளுக்காக அமைக்கப்பட்ட மக்கள் உதவி மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் பயணிகள் கேட்கும் கேள்விக்கு உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். இதில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்ஷூல் மிஸ்ரா, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலையில் ஜி.எஸ்.டி சாலையின் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது. கிளாம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு மாற்றும் இடம் பார்க்கும் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் அனைத்தும் சுத்தமாக உள்ளது.

பொதுமக்களுக்கு போதுமான அறிவிப்பு பலகைகள் உள்ளன. அனைத்து குடிநீர் குழாய்களிலும் குடிநீர் வருகிறது. குப்பைகள் எதுவும் இல்லை. புதியதாக அமைக்கப்பட்டு உள்ள காலநிலைப் பூங்கா பிப்ரவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைந்து கொண்டு வர, 20 கோடி ரூபாயை இரயில்வே துறையிடம் வழங்கி உள்ளோம். பொதுமக்களை அழைத்துச் செல்ல வசதியாக கூடுதலாக 3 பேட்டரி வாகனங்கள் வாங்க உள்ளோம்.

அதில் ஒன்று மாற்றுதிறனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். புதியதாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் மிக விரைவில் துவங்கப்படும். பொதுமக்கள் எட்டு வழி சாலை கடக்க முடியாததால் புதியதாக நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

பாஜக இணை அமைச்சர் எல்.முருகன், இந்த பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்துவிட்டு குறை கூறினால் அதனை சரி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். விமான நிலையத்திற்கு இணையான பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதே என்று அவர்களுக்கு வயிற்றெரிச்சல். மேலும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் வைத்ததால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி புகாராக அளிக்கின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.