ETV Bharat / state

புதுச்சேரி வரும் அமித்ஷா - பாதுகாப்பு பணிகள் தீவிரம்

author img

By

Published : Apr 23, 2022, 5:15 PM IST

புதுச்சேரியில் நாளை (ஏப்.24) பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதையொட்டி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.

அமித்ஷா
அமித்ஷா

புதுச்சேரி: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.24) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வருகிறார். இதனால், இன்று (ஏப்.23) இரவு சென்னை அருகேவுள்ள ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து நாளை காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு அங்கு இறங்குகிறார்.

அவரை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்று, அரவிந்தர் அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு ஸ்ரீஅரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 12:40 மணிக்கு ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கு மதிய உணவருந்திவிட்டு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.

2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 காவலர்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவது உள்பட பல திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

மீண்டும் அங்கிருந்து 3:45 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகேவுள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் செல்கிறார். அங்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தொடர்ந்து 5 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

அமித்ஷாவின் வருகையையொட்டி புதுச்சேரி நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பாஜக சார்பில் ஐந்து இடங்களில் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமித்ஷா வருகையையொட்டி நகர் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமித்ஷா புதுச்சேரி வருகை

அவரின் பயண வழி நெடுகிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடங்கள், பாஜக அலுவலகம் ஆகியவை அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வழிகெடுகிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அமித்ஷா வருகையையொட்டி விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜம்முவில் மோடியின் வருகைக்காக உச்ச கட்ட பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.