ETV Bharat / state

'போட்டித் தேர்வை வெல்வது இனி ஈஸி' புதிதாக மாற்றப்படும் கல்லூரி பாடத்திட்டம்!

author img

By

Published : Nov 27, 2022, 7:04 PM IST

தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் வரலாறு
தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் வரலாறு

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் கீழடி, ஆதிச்சநல்லூரின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகமாக இருந்தாலும், படிப்பிற்கு ஏற்ற வேலைக்கான திறன் இல்லை என கல்வியாளர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். இதனால், கல்லூரியில் மாணவர்கள் படிப்பினை முடித்த உடன் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 மாநிலப் பல்கலைக் கழகங்களிலும் புதிய பாடத்திட்டங்களை உயர்கல்வி மன்றம் 2023-24 ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்கிறது. இது குறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி கூறும்போது, “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவை வளர்ப்பதுடன், வேலை வாய்ப்பினையும் உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே அளவில் தற்பொழுதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கீழடி முதல் உக்ரைன் போர் வரை: பி.காம் பாடப்பிரிவில் தமிழ் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பி.காம் படிப்பு உட்பட இளங்கலையில் 4 பருவத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் தமிழ்நாடு வரலாற்றில் சங்ககாலம் கற்பிக்கப்பட்டது.

ஆனால், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஆய்வுகள் கிமு 6-ம் நூற்றாண்டிற்கு முன்னர் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தையும் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். இந்திய வரலாற்றிலும், சிந்து சமவெளி, வேதகால நாகரிகம் என முன்பு ஆரம்பித்தனர். ஆனால் தற்பொழுது தமிழகர்களின் நாகரிகம் 1,500 ஆண்டுகள் தொன்மையானது என்பதால், அதனையும்,வேதகால நாகரிகம் போன்றவற்றை வைத்துள்ளோம்.

மாணவர்களுக்கு தற்பொழுதைய நடப்புகளை, உதாரணமாக உக்ரைன் போர் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுத் தரும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. இது போன்ற தற்கால நிகழ்வுகளை தெரிந்துக் கொள்வதால், மத்திய, மாநில அரசின் பணிக்கான போட்டித் தேர்வினை எதிர்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் வரலாறு

வேலைவாய்ப்பு: அறிவியல் பாடங்களில் பொறியியல் பாடத்திட்டதிற்கு இணையாக கொண்டு வந்துள்ளோம். அவற்றை சீரமைத்து அடுத்த கல்வியாண்டில் செயல்படுத்தப்படும். 126 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கணக்கு, இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் அதிகளவில் சேராமல் இருப்பதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இது அவர்கள் வேலைக்கு செல்வதற்கான கருவியாக பயன் அளிக்கும்.

மாணவர்கள் படிக்கும் போதே வேலை வாய்ப்பிற்கும் தயார் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் 3 ஆண்டிற்கு கொண்டு வரப்பட்டாலும், நாட்டின் நடப்புகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும். பாடத்திட்டத்தில் 75 சதவீதம் ஒரே மாதிரியாகவும், 25 சதவீதம் பல்கலைக் கழகங்கள் விரும்பும் வகையிலும் மாற்றம் செய்துக் கொள்ளலாம். நான் முதல்வன் திட்டத்தின் படி 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை படித்தால் மாணவர்கள் பணிக்கு செல்ல முடியும்” என தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் செயலாளர் கிருஷ்ணசாமி கூறும்போது, "அரசின் அறிவுரையின் படி, 13 பல்கலைக் கழகத்தின் பதிவாளர்கள், தன்னாட்சி கல்லூரியின் முதல்வர்களுக்கு ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில், உள்ளூர் தேவைகளையும் இணைத்து அனுப்ப வேண்டும் என கேட்டோம். அதன்படி கருத்துக்கள் பெறப்பட்டன. 216 கல்லூரிகளில் இருந்து 1,400க்கும் மேற்பட்ட பாடப் பிரதிகள் பெறப்பட்டன.

பாடத்திட்டத்தில் புதிய பிரிவுகள்: பாடத்திட்டம் தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு தயார் செய்துள்ளோம். மாணவர்களுக்கு தொழில் துவங்குவதற்கும், வேலைக்கு செல்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையான கருத்துகளை தொழில் நிறுவனங்களிடம் பெற்றோம்.

பாட ஆசிரியர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறந்தவற்றை எடுத்து தேர்வு செய்து மற்றும் மாணவர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் 9 பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் உள்ளவற்றை சேர்த்துள்ளோம். மாணவர்கள் தேசிய, உலகளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் குறித்து பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மூலம் கருத்துகளை கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழில் திறன்களை வளர்க்கும் வகையில் நேரடியாக தொழில்நிறுவனங்களில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான காலத்தினையும், எந்த ஆண்டு என்பதையும் பல்கலைக் கழகம் முடிவு செய்யலாம். தமிழ் பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்களுக்கு தற்பொழுது மொழி மாற்றம், செய்தித்துறை போன்றவற்றிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு வருகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.