ETV Bharat / state

மின்வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 4:46 PM IST

Etv Bharat
Etv Bharat

TNEB: தமிழகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்க, மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள 12 மின்வாரிய மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட மேற்பார்வை பொறியாளர்,செயல் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் ஊழியர்கள் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை.

இதன் காரணமாக அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகின்றது. எனவே மின்வாரிய அலுவலகத்திலும் பணிபுரியும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய, ஆதார் இணைப்புடன் கூடிய பயோமெட்ரிக் கருவியை பொருத்த உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் மின் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,பயோ மெட்ரிக் பதிவேடு முறையை , தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நிதிநிலை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் மின்வாரியத்தில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவு, தொழில்நுட்ப பிரிவுகளில், அலுவலகம் சார்ந்த பணிகள் இருப்பதால் மாநில தலைமையகங்களில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி பிரிவை பொறுத்தவரை, ஏற்கனவே மின்னணு வருகை பதிவு முறை கடந்த 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும். பகிர்மான பிரிவைப் பொறுத்தவரை அமல்படுத்துவது தொடர்பாக சாத்திய கூறுகள் மற்றும் நடைமுறைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான நுகர்வோர் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படலாம். எனவே, பதிலளிப்பவரின் பணியின் தன்மை மிகவும் வித்தியாசமாக இருப்பதால், மின்சாரத் துறைக்கு இந்த முறை நேரடியாகப் பொருந்தாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் மின்னணு அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை சரியான நேரத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறைக்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. மீண்டும் தலை தூக்குகிறதா அரிவாள் கலாச்சாரம் - பொதுமக்கள் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.