ETV Bharat / state

சித்ராவின் குடும்பத்தினரையும் விசாரிக்க வேண்டும் - ஹேம்நாத்தின் தந்தை வலியுறுத்தல்

author img

By

Published : Dec 19, 2020, 5:47 PM IST

Chitra
Chitra

சென்னை: சித்ரா தற்கொலை குறித்து தற்போது சமூக வலைதளங்களில் வரும் தகவல்களையும் ஆராயவேண்டும் என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தங்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாகவும் சித்ராவின் குடும்பத்தார், சின்னத்திரை வட்டாரங்களிலும் விசாரணை நடத்தவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது ஒரே மகனான ஹேம்நாத் கடந்த ஒன்றரை வருடங்களாக சித்ராவை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கப்பட்டது. அப்போது ஜாதகத்தில் ஹேம்நாத்துக்கு தோஷம் இருப்பது தெரியவந்ததால் நீலாங்கரையில் உள்ள சித்ராவின் குலதெய்வ கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஹேம்நாத்தின் தந்தை வலியுறுத்தல்

நாளடைவில் சித்ராவின் புகழ் அதிகரித்ததால் அவரது தாயார் திருமணத்திற்கு காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கோபமடைந்த சித்ரா, இது குறித்து தன்னிடம் தெரிவித்ததையடுத்து அவரது தாயாரிடம் திருமணம் குறித்து பேசினோம். இதனையடுத்து அக்டோபர் மாதம் கோடம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சித்ராவின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த தன்னிடம் போதுமான பணம் இல்லை என அவரது தாயார் தெரிவித்தார். அதற்கு பணம் பற்றி கவலைப்பட வேண்டாம். தனது வீட்டை அடகு வைத்து திருமணம் நடத்தலாம் எனக்கூறினேன். இதனையடுத்து அம்பத்தூரில் உள்ள திருமண மண்டபத்தை கடந்த 7ஆம் தேதி இரு குடும்பத்தாரும் இணைந்து முன்பதிவு செய்தோம்.

இந்த நிலையில், சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டதால் காவல்துறையினர் தன் மகனை மட்டும் கைது செய்யதுள்ளனர். சித்ரா சின்னத்திரை மட்டுமின்றி, சினிமா, விளம்பரம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதனால் பல்வேறு நபர்களுடன் சித்ரா தொடர்பில் இருந்ததை தெரிந்து தான் திருமணத்திற்கு ஹேம்நாத் சம்மதம் தெரிவித்தார். இதன் காரணமாக, அவர்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை.

சமீபத்தில் வீடு, ஆடி கார் ஆகியவற்றை சித்ரா வாங்கினார். அது குறித்தும் தற்போது சமூக வலைதளங்களில் வரும் தகவல்களையும் காவல்துறையினர் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.