ETV Bharat / state

மிக்ஜாம் புயல் பாதிப்பு..! உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 4:19 PM IST

Helpline WhatsApp number announced for Michaung cyclone rescue volunteers
உதவி மையத்தின் வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு

Michaung Cyclone Help Desk: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் அல்லது அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கீழ்க்காணும் அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு அல்லது தகவல் அனுப்பி, பதிவு செய்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம்:

  • ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - ​9791149789
  • பாபு, உதவி ஆணையர் - ​9445461712
  • சுப்புராஜ், உதவி ஆணையர் - 9895440669​
  • ​பொது - 7397766651

நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் அல்லது தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் தாக்கம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.