ETV Bharat / state

தமிழகத்தில் பரவும் புதுவகை கரோனா: பொது இடங்களுக்குச் செல்லும் போது முக கவசம் அணிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 4:04 PM IST

தமிழ்நாட்டில் பரவிவரும் புது வகை கரோனா குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை
தமிழ்நாட்டில் பரவிவரும் புது வகை கரோனா குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை

New Corona Virus: புதிய வகை கரோனா பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 25ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை: புதிய வகை கரோனா தொற்றின் அபாயம் மற்றும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "கரோனா ஜெ.என்.1.1 (JN.1.1) என புதியவகை தொற்றுக்காரணமாக பொதுமக்களுக்கு இணை நோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய்ப் பாதிப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய்ப் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

கரோனா தீநுன்மி பாதிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 4 ஆண்டுகளாகத் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை கரோனா, பல்வேறு உருமாற்றங்களைப் பெற்று தற்போது JN.1.1 என்கின்ற புதிய வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் JN.1.1 வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.29) தமிழ்நாட்டில் 45 பேரும், சென்னை மாவட்டத்தில் மட்டும் 25 பேரும் புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குழுவான (Cluster) பாதிப்புகள் பதிவாகவில்லை. பொதுச் சுகாதாரத் துறையின் சார்பாகப் பொதுமக்களுக்கு இணை நோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய்ப் பாதிப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய்ப் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் இதுவரை தீவிர பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை. எனவே பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1லட்சத்து 25ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவரை 8ஆயிரத்து 953 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த காலங்களில் ஏற்பட்ட சராசரி பாதிப்புகளின் எண்ணிக்கையை விடக் குறைவாகும். எனவே பொதுமக்கள் டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து, வாரத்திற்கு 1000 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 10 வாரங்களில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெறத் தொடங்கியது. இன்று (டிச.30) 10வது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 23ஆயிரத்து 315 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக அடையாறு, தரமணி 100அடி சாலையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், பொதுச் சுகாதார குழு தலைவர் டாக்டர்.கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோவை டூ பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை.. காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.