ETV Bharat / state

கரோனா களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

author img

By

Published : Jan 7, 2022, 7:02 AM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ள நபர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள களப்பணியாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அவர்களின் அன்றாட பணிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கரோனா களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுகரோனா களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ள நபர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள களப்பணியாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அவர்களின் அன்றாட பணிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம், 200 வார்டுகளுக்கு ஆயிரம் நபர்கள் களப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு களப்பணியாளரும், அறிகுறிகள் ஏதும் இல்லாமல் அல்லது லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 45 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டு தனிமையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோயாளிகளுக்கு மஞ்சள் பை

அவ்வாறு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டில் காற்றோட்டமுள்ள தனி அறை, தனி கழிப்பிட வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவர்கள் ஐந்து நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். களப்பணியாளர்கள் நாளொன்றுக்கு ஒரு முறை தொற்று பாதித்த நபர்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் உடல்நலம் குறித்து விசாரித்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

தொற்று பாதித்த நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா எனவும், சுவாச அளவினை ஆக்ஸிமீட்டர் கொண்டும் கண்டறிய வேண்டும். வீட்டு தனிமையில் இருக்கும் தொற்று பாதித்த நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மளிகை சாமான்கள், உணவு, இதர பொருட்களை களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஒவ்வொரு தொற்று பாதித்த நபருக்கும் தேவையான விட்டமின், சிங்க், காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கொடுக்க வேண்டும்.

நோயாளிகள் உபயோகித்த பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏதுவாக அவர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த மஞ்சள் பையில் தனியாக சேகரித்து இல்லங்களுக்கு வரும் தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்த வேண்டும்.

தொற்று பாதிப்பு பதிவேடு பராமரிப்பு

ஒவ்வொரு தொற்று பாதித்த நபரிடமும் கட்டுப்பாட்டு அறை, களப்பணியாளரின் கைபேசி எண்கள் வழங்க வேண்டும். தொற்று பாதித்த நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால், அவசரம் கருதி களப்பணியாளர்கள் தாமதமின்றி செயல்பட வேண்டும். தொற்று பாதித்த நபரின் வீட்டில் உள்ள மற்ற நபர்களையும் தினமும் கண்காணிக்க வேண்டும். மற்ற நபர்களுக்கு எவருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

தொற்று பாதித்த நபரின் வீட்டின் முன்புறம், பிறர் தெரிந்து கொள்ளும் வகையில் கோவிட் தொற்று பாதித்த வீடு என்ற நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும். தொற்று பாதித்த நபர்களுக்கு மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

நோயாளிகளிடம் கனிவுடனும், பண்புடனும் தகுந்த பாதுகாப்பு உடைகளை அணிந்து அணுக வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொற்று பாதித்த நபர் குறித்த தகவல்கள் அனைத்தையும் பணியாளர்கள் தங்களின் பதிவேட்டில் பதிவிட்டு பராமரிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட களப்பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பணியாளர்களும் தவறாமல் பின்பற்றி கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது இரவு நேர ஊரடங்கு: காவல் துறை பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.