ETV Bharat / state

பாலியல் வழக்கு - சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்

author img

By

Published : Apr 20, 2022, 6:14 PM IST

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த ஜூன் 15ஆம் தேதி கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீதான புகார்கள் தொடர்பாக எட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் கைது செய்யப்பட்டார்.

இந்த எட்டு வழக்குகளில் ஆறு வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலும், முதலில் கைதான வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற்றார். பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் (4/2021) ஜாமீன் கோரிய மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்தன.

7 வழக்கில் கிடைத்த ஜாமீன்: இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் முதலில் பதிவு செய்த வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஏழு வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புகார் அளித்த பெண் 2014-15ஆம் ஆண்டில் படிப்பை முடித்தாலும், 2021ஆம் ஆண்டு தொடக்கம் வரை மின்னஞ்சல் மூலம் பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென புகார் அளித்துள்ளதாகவும், ஆசிரியர்கள் மீது மாணவி நம்ப முடியாத அளவிற்கு புகார்களை கூறியுள்ளார் என்றும், ஆசிரியர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்தினருடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் முறைகேடாக நடக்க வாய்ப்பே இல்லை என்றும், ஜாமீன் நிராகரிப்பிற்கான வழக்கமான காரணங்களே கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைதான பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு கைது என சிபிசிஐடி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

எட்டு வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், மற்ற வழக்குகளில் விசாரணையை முடிக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பிய நீதிபதி, பள்ளியிலிருந்து வெளியேறிய பிறகும் மாணவி ஏன் ஆசிரமம் வந்து சென்றுள்ளதாக மனுதாரர் கூறுவதாக சுட்டிக்காட்டினார்.

காவல் துறை தரப்பில் ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைப்பார், சாட்சிகளை மிரட்டுவார், மாயமாகிவிடுவார் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளிலும் விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார். மேலும் அவரது பாஸ்போர்ட்டை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும், விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

மேலும், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழ்நாட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் கூடுதல் நிபந்தனைகளை நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் பெற்றுள்ள சிவசங்கர்பாபா, இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றதன்மூலம் விரைவில் சிறையிலிருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பெண் ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்: 2 இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.