ETV Bharat / state

அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என கூறுகின்றனர்: ஆளுநர்

author img

By

Published : Jan 10, 2023, 9:35 PM IST

அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என கூறுகின்றனர்: ஆளுநர்
அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என கூறுகின்றனர்: ஆளுநர்

தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என உள்நோக்கத்துடன் மொழிபெயர்த்து அழைக்கவில்லை எனவும்; அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்கின்றனர் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என கூறுகின்றனர்: ஆளுநர்

சென்னை: குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணிக்கான தேர்வில் தகுதிப்பெற்று நேர்முகத் தேர்விற்குச் செல்லும், 60 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று ஆளுநரிடம் கேள்விகளை எழுப்பி நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளைப் பெற்றனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்கள் குறித்தும், மாநிலப் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது குறித்தும், தேச நலன், மனித உரிமைகள், மொழிப் பிரச்னைகளை அரசு நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் 3 மணி நேரத்திற்கும் மேலாக கேள்வி எழுப்பிய மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார்.

நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளவது குறித்து மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசும்போது, 'உச்ச நீதிமன்றம் சொன்ன சட்டப்படி, நீங்கள் பார்த்தால், அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில், சில வணிகங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. ஆனால், நீங்கள் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தும்போது ஒரு டிஸ்ஸார்ட் இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல இ-காமர்ஸ்கள் நாட்டின் உள்ளே வந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா தற்போது உள்ளது. முடிவு எடுக்கும்போது, ​​தற்காலிகமாக தவிர்க்க முடியாதது நடக்கும். சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும், நீண்ட காலத்தில் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய டிஜிட்டல் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம். இதனால் ஒரு வழித்தட விற்பனையாளர் கூட வெற்றியடைந்து ஆறுதல் அடையலாம்.

மத்திய அரசுப் பணிக்கு வருவதற்கு ஏன் விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினால், மக்களுக்கு சேவை செய்ய என்று எல்லோரையும் போல பதில் செல்லாமல், சேவைக்காக மட்டும் மத்திய அரசுப்பணிக்கு வரவில்லை, மத்திய அரசுப் பணி என்பது சமூக கௌரவத்தையும், ஊதியத்தையும் தருவதாலும்; இந்த பணியை நான் விரும்புகிறேன் என நேர்மையாக பதில் சொல்லுங்கள்.

நிர்வாக ரீதியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை எழுகிறது. அவமதிக்கும் வகையில் ஒன்றிய அரசு என்று தமிழ்நாட்டில் சிலர் மொழிபெயர்த்து அழைப்பதுதான் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில் ஒன்றிய அரசு என்று கூறி யாரும் பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியல் காரணங்களுக்காக இப்படியான பிரச்னைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது, நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் அல்ல, இந்தியா என்பது பல கலாசாரம், பல இனக்குழுக்கள் உள்ள நாடு. இதில் எந்தப் பகுதியிலும் ஒரே இனத்து மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி, அந்தப் பகுதியை அவர்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியாது. தனி மாநிலம் என்பது அந்த இடத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எனவே, கலாசாரம் சார்ந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கூற முடியாது. அதே நேரம், விலங்குகளுக்குப் பாதிப்பு இல்லாமல், வீரர்களுக்கும் பாதிப்பும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கலாம்.

அனைவருமே பல மொழிகளை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ் உயர்ந்த செம்மொழி, தமிழ் குறித்த பெருமிதம் தமிழக மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகிறது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றி, மேலும் ஒரு மொழியை கற்றுத்தரலாம். அது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும். குறிப்பாக மத்திய அரசுப் பணிக்கு செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும்.

ஒரு இந்திய மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வது அனைவருக்கும் பயன் தரும், அதேநேரம் இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி, இந்தி தான். எனவே இந்தியை கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு பெரியளவில் உதவும். இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் இந்தியை படிப்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் உதவும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதன் வழக்கமான பாரம்பரியம் பின்பற்றப்பட வேண்டும், நீதிமன்றமும் அதைத்தான் கூறி உள்ளது. கோயில் வணங்குபவர்களுக்கான இடம், போராட்டக்காரர்களுக்கான இடமல்ல. சாதி காரணமாக கோயிலுக்கு செல்லக் கூடாது என யாரையும் தடுக்க முடியாது, அப்படி தடுத்தால் அது தவறு.

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பது சட்டத்தின் அடிப்படையில்தான், எனவே சட்டத்தை மதிக்க வேண்டும். Temple Activist போல தங்களை கருதிக் கொண்டு மத்திய அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் யாரும் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும் எனக் கூறக்கூடாது.

தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால், சட்டம் கொடுத்துள்ள உரிமைகளின் படியே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் போராட்டங்கள் நடைபெறுவது இல்லை, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுமே போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும். உரிமைக்காக போராடுவதை தவறு எனக் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.