ETV Bharat / state

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நிதியுதவி!

author img

By

Published : Feb 25, 2023, 10:46 AM IST

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நிதியுதவி!
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நிதியுதவி!

சென்னையில் இந்தியா மற்றும் இலங்கையின் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இரு அணிகளுக்கும் சேர்த்து 18 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

சென்னை: சென்னையில் இந்தியா, இலங்கை இடையே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச டி20 சீரிஸ் கிரிக்கெட் போட்டியில், முதல் இரண்டு இடங்களில் வென்ற இலங்கை, இந்திய அணி வீரர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று (பிப்.24) சந்தித்துப் பேசினர்.

முன்னதாக டி20 சீரீஸில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்த வீரர்கள், ராமச்சந்திரா பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் கடந்த இரு நாட்களாக (பிப்.23, 24) நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

இந்த நிலையில் இரு அணி வீரர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை அழைத்திருந்தார். அப்போது தர்பார் மண்டபத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தலா 18 வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். அந்த நேரத்தில் இரு அணி வீரர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கைச் சூழல் குறித்தும், வறுமை நிலையிலும் விளையாட்டு மீதான ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதையும் கூறினர்.

அதில் ஒரு சில வீரர்கள், தங்களுக்கு அன்றாடம் மூன்று வேளை உணவு கூட கிடைப்பது நிச்சயமில்லாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் ஒரு கிரிக்கெட் வீரர், கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என்றும், இத்தனை ஆண்டுகளில் மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் எங்களை அழைத்து மரியாதையாக எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்பது இதுதான் முதல் முறை என்றார்.

இவ்வாறு இரு அணி வீரர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த ஆளுநர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆளுநர் தரப்பு நிதியில் இருந்து முதலிடம் வென்ற இலங்கை அணிக்கு 10 லட்சம் ரூபாயும், 2வது இடத்தைப் பிடித்த இந்திய அணிக்கு 8 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "கோவில்பட்டியை தனி மாவட்டமாக பரிந்துரை செய்யுங்கள்" - ஆளுநரிடம் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.