ETV Bharat / state

'காசி தமிழ் சங்கமம்'; தமிழ் பிரதிநிதிகள் சென்ற ரயிலை வழியனுப்பிய ஆளுநர்

author img

By

Published : Nov 17, 2022, 8:37 PM IST

காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்வதற்காக முதல் தொகுப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 பிரதிநிதிகள் சென்ற ரயிலை ஆளுநர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளை கொடியசைத்து வழியனுப்பிவைத்த ஆளுநர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளை கொடியசைத்து வழியனுப்பிவைத்த ஆளுநர்

சென்னை: காசி தமிழ் சங்கமத்திற்கு முதல் தொகுப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 பிரதிநிதிகளுடன் காசி செல்லும் ரயிலை ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து அனுப்பிவைத்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்று சிறப்பித்தார்.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் போது, தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும். ஒவ்வொரு ரயிலிலும் 216 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ரவி, 'காசி என்பது தமிழ் மக்களின் இதயங்களில் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு இருந்துள்ளது. சங்க இலக்கியங்களில் கூட காசி பற்றிய குறிப்புகள் உள்ளன. காசியில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கோயில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் மிக நன்றாக தமிழ் பேசுகிறார்கள்.

'காசி தமிழ் சங்கமம்'; தமிழ் பிரதிநிதிகள் சென்ற ரயிலை வழியனுப்பிய ஆளுநர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர்களுக்கு காசியுடன் பிணைப்பு உள்ளது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தூரம் அதிகம் என்பது புவியியல் ரீதியில் தான், மனரீதியில் அல்ல. காசியைத் தரிசிக்க வேண்டும் என்று கனவுகாணும் மக்களுக்கு ஒரு மாத காலம் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் பேருதவியாக இருக்கும்.

இந்தப் பயணம் புதியது அல்ல, நீண்டகாலமாக மறக்கப்பட்ட ஒன்றை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியாகும் இது. ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன' என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், 'மத்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மிகப்பெரிய கலாசாரப் பகிர்தலை ஒரு மாத காலத்திற்கு காசியில் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலாவது தொகுப்பினராக ராமேஸ்வரத்தில் இருந்து காசி (வாரணாசி) வரை இந்த ரயிலில் பிரதிநிதிகள் செல்கின்றனர்.

இவர்கள் அங்குள்ள கோயில்கள், கங்கை நதி ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள். தமிழ்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தினந்தோறும் நடைபெறும் திருக்குறள், இதிகாசங்கள் பற்றிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் பல ஆண்டு காலமாக உறவு நீடித்து வருகிறது.

அந்த உறவைப் புதுப்பிக்கும் விதமாக ’ஒரே பாரதம் உன்னத பாரதம்’ இயக்கத்தின் சார்பில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களும், தமிழ் அறிஞர்களும், கல்வியாளர்களும் இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளனர். வரும் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காசியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்' என்று தெரிவித்தார்.

காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, இரண்டு தொன்மையான இந்திய கலாசார நகரங்களின் பன்முகத் தன்மையுடன், நிபுணர்கள் மற்றும் அறிஞர்களிடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெறும்.

இரண்டு ஞானம் மற்றும் கலாசார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வருவது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் புரிதலை உருவாக்குவது, இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கமாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் நவ.19ஆம் தேதி பிரதமர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.