ETV Bharat / state

'குமரியில் மக்கள் பசியால் வாடும் சூழல்; எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உதவுங்கள்' - சீமான்

author img

By

Published : May 28, 2021, 10:04 PM IST

'கன்னியாகுமரியில் மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல்' - எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உதவுங்கள் சீமான்
'கன்னியாகுமரியில் மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல்' - எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உதவுங்கள் சீமான்

தொடர் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும், நம் மக்களின் பெருந்துயரைப் போக்க நாம் தமிழர் உறவுகள் துணைநிற்போம் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிக் காட்சியளிக்கும் நிலையில், இதுவரை அரசின் சார்பில் எவ்வித மீட்புப்பணிகளும், துயர் துடைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதிருப்பதால் மக்கள் செய்வதறியாது தவிக்கும் அவல நிலை பெருங்கவலையைத் தருகிறது.

மக்கள் தவித்து வருகின்றனர்

மக்கள் தவித்து வருகின்றனர்
மக்கள் தவித்து வருகின்றனர்

'யாஸ்' புயலின் தாக்கத்தால் கடந்த நான்கு நாட்களாகக் கன்னியாகுமரி மாவட்டம், முழுமைக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்துவரும் தொடர்மழையால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுகிய நாட்களில் ஏற்பட்ட பெருமழையால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கி, மக்கள் தவித்து வருகின்றனர். குலசேகரம், பேச்சிப்பாறை, தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாகர்கோவில், பள்ளம், குழித்துறை, புலியூர்குறிச்சி, ஈசாந்திமங்கலம், திருப்பதிசாரம், ஆளூர், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டத்தின் முதன்மைச்சாலைகள் யாவும் வெள்ளத்தால் சேதமாகியுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் உள்ளிட்ட அனைத்து முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

இருளில் மூழ்கியுள்ளன

இருளில் மூழ்கியுள்ளன
நீரால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்

நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடந்த மூன்று நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன. தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுப் பல கிராமங்கள் தனித்தீவுகளாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. மாவட்டத்தில் அனைத்துக்குளங்களும், கால்வாய்களும் நிரம்பி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் 20,000 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல்

மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல்
மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவு, குடிநீர், மருந்துகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாத காரணத்தினால், கரோனா தொற்று ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தாங்களாக வாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அரசும் எவ்விதத் துயர்துடைப்பு உதவிகளும் செய்யாதிருப்பதால், வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் பசியால் வாடும் கொடுமையான சூழல் நிலவுகிறது.

அரசின் பெருங்கடமை

அரசின் பெருங்கடமை
அரசின் பெருங்கடமை

ஆகவே, மெத்தனப்போக்குடன் நடைபெறும் வெள்ளப்பாதிப்பு மீட்புப்பணிகளை விரைந்து செயல்பட அரசு உத்தரவிட்டு போர்க்கால அடிப்படையில் மக்களை மீட்க வேண்டுமெனக் கோருகிறேன். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சரிசெய்யவும், மின்கம்பங்களைப் பழுதுபார்த்து தடைபட்டுள்ள மின்விநியோகத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், உடை, கழிப்பிட வசதி செய்து தந்து, கரோனா பெருந்தொற்றுப் பரவாமல் தடுக்கப் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் பெருங்கடமையாகிறது.

பேரிடர் பாதித்த மாவட்டம்

பேரிடர் பாதித்த மாவட்டம்
வீடுகளுக்குள் புகுந்த நீர்

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தினைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதோடு வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும், வெள்ளத்தால் பயிர்கள் நாசமாகிப் பேரிழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கும் சேதமதிப்பீடு செய்து உரிய இழப்பீடுகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

துயர் துடைப்பு உதவி

துயர் துடைப்பு உதவி - எனதன்பு தம்பி, தங்கைகள்
எனதன்பு தம்பி, தங்கைகள் துயர் துடைப்பு உதவி செய்யுங்கள்

கடந்த காலங்களில் இதுபோன்ற பேரிடர்கள் ஏற்பட்டபோதெல்லாம் உடனடியாகக் களத்தில் இறங்கி துயர் துடைப்பு உதவிகளை வழங்கிய என் உயிர்க்கினிய நாம் தமிழர் உறவுகள், தற்போது கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நமது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் துயர்துடைக்கவும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் அதன் அருகில் அமைந்த தென்மாவட்டங்களைச் சார்ந்த எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக சேகரித்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் நேரடியாக வழங்கி, இப்பெருந்துயரில் இருந்து மீண்டுவர அவர்களுக்கு ஆறுதல் கூறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாமல்

எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாமல்
எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாமல்...

அதேசமயம் தற்போதைய கரோனா பெருந்தொற்றுச் சூழலைக் கருத்தில்கொண்டு அரசு அறிவித்துள்ள கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, கையுறை, முகக்கவசம், தொற்றுநீக்கி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, நம்மால் மற்றவர்களுக்கோ மற்றவரால் நமக்கோ எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாமல் மிகமிகப் பாதுகாப்பாக நமது உதவிகளைச் செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் சொந்தங்களுக்கு அறிவுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.