ETV Bharat / state

அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jan 19, 2022, 10:45 PM IST

Updated : Jan 19, 2022, 10:57 PM IST

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் 30 விழுக்காடு ஊக்க மதிப்பெண் என இரண்டுமே வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊக்க மதிப்பெண்
ஊக்க மதிப்பெண்

சென்னை: அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்டி, எம்எஸ் முதுகலை மருத்துவப்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் 30 விழுக்காடு ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது.

முதுகலை மருத்துவப் படிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1,968 இடங்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும் என்றும் மீதம் 969 இடங்கள் உள்ளதாகவும், அதில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது.

வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில், அணுக முடியாத பகுதி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிவதாகவும் இதனால் பொதுமக்கள் தான் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தடை இல்லை

இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணி புரியக் கூடிய மருத்துவர்களுக்கு இரண்டுமே வழங்க எந்தத் தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்கத் தடை இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு மகுடம்! என்னவா இருக்கும்?

Last Updated : Jan 19, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.