ETV Bharat / state

சென்னை பெரும் வெள்ளத்தால் பெருகிய குப்பை... கழிவுகளை அகற்றும் தொடர் பணியில் மாநகராட்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 1:51 PM IST

Corporation Commissioner Radhakrishnan said 68 thousand metric tons of garbage was disposed of in 8 days due to Chennai floods
மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்

Chennai Corporation Commissioner: சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் முற்றிலும் குப்பைகளை அகற்ற பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் டிசம்பர் 4ஆம் தேதி நிலவிய மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி, மிகுதியான பாதிப்புக்கு உள்ளாகியது. அதன் பிறகு தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

இந்த இயல்பு நிலைக்கு திரும்ப இரவு பகல் பாராமல், சுமார் 16 ஆயிரம் பணியாளர்களும், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும் தொடர்ந்து இப்பணிகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள், செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

இது மட்டுமின்றி, சென்னை மாநகராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடந்த 8 நாட்களில் 68 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

அகற்றபட்ட குப்பைகளின் விவரம்: டிச.6ஆம் தேதி அன்று 5 ஆயிரத்து 915 மெட்ரிக் டன் குப்பைகளும், 7ஆம் தேதி 6 ஆயிரத்து 465 மெட்ரிக் டன் குப்பைகளும், 8ஆம் தேதி அன்று 7 ஆயிரத்து 705 மெட்ரிக் டன் குப்பைகளும், 9ஆம் தேதி அன்று 8 ஆயிரத்து 476 மெட்ரிக் டன் குப்பைகளும், 10ஆம் தேதி அன்று 8 ஆயிரத்து 948 மெட்ரிக் டன் குப்பைகளும், 11ஆம் தேதி 9 ஆயிரத்து 215 மெட்ரிக் டன் குப்பைகளும், 12ஆம் தேதி 10 ஆயிரத்து 466.97 மெட்ரிக் டன் குப்பைகளும், 13ஆம் தேதி அன்று 11 ஆயிரத்து 613.19 மெட்ரிக் டன் குப்பைகளும் என மொத்தமாக 68 ஆயிரத்து 805.82 குப்பைகளை அகற்றப்பட்டுள்ளாதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 6 ஆயிரத்து 553.89 மெட்ரிக் டன் குப்பைகள் செடி, மரம், கிளை போன்றவை ஆகும்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத் செய்தியிடம் பேசுகையில், “பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இதுவரை எந்த இடத்திலும் யாரும் இவ்வளவு குப்பைகளை அகற்றியது இல்லை.

ஆனால், சென்னை மாநகராட்சி தொடர்ந்து இதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தொடர்ந்து லாரிகள் மூலம் குப்பைகள் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையில் தினமும் 5 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் குப்பைகள் கையாளப்பட்டது. ஆனால் பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, கடந்த 8 நாட்களில் 68 ஆயிரத்து 805.82 மெட்ரிக் டன் குப்பைகள் கையாளப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்து வரும் சில நாட்களுக்கு இதே அளவு குப்பை வரும் நிலை உள்ளது.

பெரும் வெள்ளதால், பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் பழுதடைந்துள்ளது. அதற்கு பதிலாக 2 டன் கொள்ளளவு கொண்ட பெரிய வண்டிகளை வைத்து குப்பைகளை அகற்றி வருகிறோம். சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முற்றிலும் குப்பைகளை அகற்ற பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடன் தவணை செலுத்துவதை தளர்த்த கோரிக்கை.. நிதியமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.