பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்

author img

By

Published : Sep 24, 2022, 11:05 AM IST

Updated : Sep 24, 2022, 12:17 PM IST

நாடு முழுவதும் என்ஐஏ சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பிண்ணனி என்ன? - முழு விவரம்

நாடு முழுவதும் என்ஐஏ சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் அமைப்புகள் இணைந்து கடந்த 2007 ஆம் ஆண்டு நேஷ்னல் டெவலப்மெண்ட் ப்ரன்ட் என்ற அமைப்பு, பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது.

ஏற்கனவே தலித் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காகவும், காங்கிரஸ், ஜே.டி.எஸ் மற்றும் பாஜக கட்சியினரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வந்த சிமி அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் மற்றும் கோவா என மொத்தம் 23 மாநிலங்களில் கிளைகளை இந்த அமைப்பு நிறுவியது. குறிப்பாக இந்த அமைப்பு தேர்தல் களத்தில் போட்டியிடாமல் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், இந்து ஜகரான் வேதிகே போன்ற இந்து அமைப்புகள் மூலம் முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்கள் குறித்து வெளிக்கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வந்தது.

மேலும் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு, இஸ்லாமிய தனி நபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் மனித மேம்பாடு போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறது. இஸ்லாமிய இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பிரச்சாரம், 2012 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை இவ்வமைப்பு நிகழ்த்தியது.

நாடு முழுவதும் என்ஐஏ சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா

இந்த அமைப்பின் கட்சியாக கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) தொடங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவில் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் கேள்வித்தாள் தயாரித்த சர்ச்சையில் பேராசிரியர் ஜோசப்பின் கைகள் வெட்டப்பட்ட வழக்கில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து இவ்வமைப்பைச் சேர்ந்த 13 பேருக்கு தண்டனை கிடைத்தது. அதனைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு கர்நாடகாவில் விஸ்வ நாத் ஷெட்டி என்பவர் இறந்த வழக்கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறி 144 தடை உத்தரவு வரை சென்றது.

அதேபோல் 2011 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு, 2012 ஆம் ஆண்டு புனே குண்டு வெடிப்பு, 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத் குண்டு வெடிப்பு போன்றவற்றில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு துறை விசாரணையில் தெரிய வந்தது. 2019 ஆம் ஆண்டு, மதமாற்றத்திற்கு எதிராக பேசிய பாமக கட்சியை சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு 5 பேரை தேடி வரும் நிலையில், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்த அமைப்பு தீவிரமான போராட்டங்களை நடத்தியது என்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பிறகு பாப்புலர் ப்ரன்ட் ஆப் அமைப்பின் வங்கி கணக்கில் 100 கோடிக்கு மேல் சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பின் மாணவரணி பொதுச்செயலாளர் ரவூப் செரீப் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்திய நாட்டுக்கு எதிராகவும், தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யக்கோரி பல மாநில அரசுகள் கடிதம் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிக ஆபத்தானது’ எனக் கூறியதும், பாஜக தலைவர் அண்ணாமலை பாப்புலர் ‘பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தொண்டர்கள் கவனமாக இருங்கள்’ என பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தற்போது தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுதல், தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க பயிற்சி முகாம் நடத்துதல், தடை செய்த அமைப்பிற்கு ஆட்களைச் சேர்த்தல் உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நேற்று என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தினர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரா உள்பட இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் இருக்கும் 93 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இந்த சோதனையை எதிர்த்து பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடந்த சில வருடங்களாக அதிகப்படியான குற்ற வழக்குகளில் சிக்கி பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது மொத்தம் 19 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சோதனையில் இந்த அமைப்பைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள், அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

அதேபோல் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, அதன் உறுப்பினர்கள் தொடர்பான எந்த ஒரு விவரங்களையும் முறையாக பரமாரிக்காமல் இருந்து வருவதால், கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய மற்றும் பலரை கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக என்ஐஏ சோதனை - 11 பேர் கைது

Last Updated :Sep 24, 2022, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.