ETV Bharat / state

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இலவச கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!

author img

By

Published : Apr 12, 2023, 3:43 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுக்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, "விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கொடுத்ததில் இருந்து, கடந்த 4 மாதங்களாக சென்னையில் நடக்கும் அனைத்து விளையாட்டுத்துறை நிகழ்ச்சியிலும் நான் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். இங்கு பெண் குழந்தைகள் அதிகம் உள்ளீர்கள். சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு விளையாடவில்லை என்றாலும், இவர் விக்கெட் எடுத்தால் கை தட்டி ரசிப்போம். தமிழ்நாட்டுக்கு உள்ள சிறப்பு, யாராக இருந்தாலும் சிறப்பான விளையாட்டு திறமை இருப்பவர்களை கைத்தட்டி ரசிப்போம்.

அஸ்வின் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.42 கோடி செலவில் ஊராட்சிகளில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும்"என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின், "பல நாட்களாக கிரிக்கெட் கற்றுத் தருவது என் ஆசையாக இருந்தது. பொதுவாக விளையாட்டு பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் வாங்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இப்போது நம் விளையாட்டுத்துறை அமைச்சர் மூலம் நிறைவேறி உள்ளது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிற்சி மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி சிஎஸ்கே அணிக்கு கூட எதிர்காலத்தில் விளையாடலாம். பெண்கள் கிரிக்கெட் குழு உள்ளது அதிலும் விளையாடலாம்" என குறிப்பிட்டார்.

'கிரேட் கோல்ஸ்' என்ற கால்பந்து பயிற்சி நிறுவனத்தால் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் முதற்கட்டமாக 60 மாணவ, மாணவிகளுக்கு 11 மாதங்களில் 80 நாட்கள் (வாரம் இரு முறை) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு, இலவசமாக சீருடைகள் மற்றும் காலணிகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக வடசென்னையில் சென்னை உயர்நிலைப்பள்ளி, மத்திய சென்னையில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தென் சென்னையில் சென்னை உயர்நிலைப்பள்ளி-கோட்டூர் ஆகிய மூன்று இடங்களில் தொடங்கப்பட உள்ளது.

இதேபோல், 12 மாதங்களில் 154 நாட்கள் (வாரம் 3 முறை) கிரிக்கெட் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலத்தில் மாணவர்கள் 22 நாட்கள் போட்டிகளில் பங்குபெறுவர். இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு, மட்டைப் பந்துகள், காலணிகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் இலவசமாக மாநகராட்சி தரப்பில் வழங்கப்படும். இப்பயிற்சியானது கிரிக்கெட் வீரர் அஸ்வினின் வழிக்காட்டுதலின்படி நடைபெற உள்ளது. ரூ.19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நுங்கம்பாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு 6 பயிற்சி தளங்கள் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.