ETV Bharat / state

டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை - முன்னாள் அமைச்சர் வேலுமணி

author img

By

Published : Oct 27, 2022, 8:53 PM IST

டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை
டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை

மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர்கள் ஒளிவுமறைவற்ற வகையில் ஒதுக்கப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை: கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, டெண்டர் முறைகேடு தொடர்பாகக் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அளிக்கப்பட்ட புகார்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அந்த வழக்குகள் விசாரணையின் போது, புகார் தொடர்பாக எஸ்.பி. பொன்னி தலைமையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. பொன்னி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததாகவும், அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியதாகவும், அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையைக் கைவிடுவது என முடிவு எடுத்ததாக வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யக் கோரி தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்றோ, பணிகளைச் செயல்படுத்தியதில் முறைகேடு என்றோ புகார் கூறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சர் என்ற முறையில் தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர, எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையைக் கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்குப்பதியக் கோரி தொடர்ந்த வழக்கில், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்வது குறித்தும் இந்த நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல என்றும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை எனவும், வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணை மேற்கொள்ளவும் தான் அரசு அனுமதி வேண்டும் எனவும், முதலில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த மட்டுமே அரசின் அனுமதி பெறப்பட்டதாகவும், அதற்கு பிந்தைய ஆரம்பக்கட்ட விசாரணைக்கும், வழக்குப்பதியவும் அரசின் அனுமதி பெறவில்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போதுமான கால அவகாசம் இருந்த போதும், அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராகப் புதிதாக வழக்குப்பதிவு செய்ய முடியும் எனவும் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரை விடுவித்துவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதியும் முன், சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும், ஆனால் அரசியல் காரணமாகச் சொத்துக்கள் விவரங்கள் குறித்து வேலுமணியிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் ஏதும் இல்லை எனவும் வாதிட்டார்.

உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வேலுமணிக்கு எதிராக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பு பதில் வாதத்துக்காக மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (அக் 28) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.