ETV Bharat / state

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுநர் கைது

author img

By

Published : Mar 21, 2023, 10:16 PM IST

Etv Bharat
Etv Bharat

நடிகர் ரஜினிகாந்தின் மகள் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையைச் சேர்ந்தவர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்(41). நடிகர் ரஜினிகாந்தின் மகளான மூத்த ஐஸ்வர்யா தமிழில் 3, வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். கடந்த மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கிலான வைர நகைகள் காணவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு லாக்கரில் வைத்திருந்த நகைகளை திறந்து பார்க்கவில்லை எனவும்; சிஐடி நகர், போயஸ்கார்டன், செயின்ட் மேரிஸ் சாலை ஆகிய மூன்று வீடுகளில் லாக்கரில் மாறி மாறி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் உட்பட மூன்று பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரின் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் பணபரிவர்த்தனை நடந்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த பணியாளர் ஈஸ்வரி(40) மற்றும் திருவேற்காட்டைச் சேர்ந்த வெங்கடேசன்(44) ஆகியோரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈஸ்வரி கடந்த 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்ததும், வீட்டில் லாக்கர் சாவி இருக்கும் இடத்தை அறிந்து, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈஸ்வரி சிறுகச் சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்த நகைகளைத் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் உள்ளதால், குடும்பச் சூழ்நிலை காரணமாக நகையைத் திருட முடிவு செய்து சிறுகச் சிறுக திருடி விற்பனை செய்து, நிலம் வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் 1 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதும், கடனை 2 வருடங்களில் அடைத்திருப்பதும் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

மேலும் திருட்டிற்கு ஈஸ்வரிக்கு உடந்தையாக கார் ஓட்டுநர் வெங்கடேசனும் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கார் ஓட்டுநர் வெங்கடேசனுக்கு திருடிய நகைகளில் பங்கு சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1 கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் திருடப்பட்ட சில நகைகளை பிரபல ஜவுளிக் கடையில் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் திருடிய குற்றத்திற்காக ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீசார் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் ஆசிரம வழக்கில் 7 பேர் ஜாமீன்கோரி மனு தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.