ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் விவகாரம்: நேர்மையான விசாரணை நடத்துமா விசாகா கமிட்டி?

author img

By

Published : Feb 26, 2021, 12:03 PM IST

Updated : Feb 26, 2021, 7:57 PM IST

Rajesh dass  பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் விவகாரம்  ராஜேஷ் தாஸ் விசாகா கமிட்டி  ராஜேஷ் தாஸ் பாலியல் விவகாரம்  சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்  Law and Order Special DGP Rajesh Dass  Female IPS officer sexual harassment  Rajesh Dass Visa Committee  DGP Rajesh Dass sex affair
Rajesh Dass Vishaka Committee

சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் விசாகா கமிட்டி நேர்மையான விசாரணை நடத்துமா அல்லது கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோரிடம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் புகார் அளித்தார். இச்சம்பவம் காவல் துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு டிஜிபி ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வியும் எழுப்பினார். இதையடுத்து, உடனடியாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்பில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் பெண் அலுவலர் தலைமையின் கீழ் விசாகா கமிட்டியை தமிழ்நாடு அரசு அமைத்தது.

யார் இந்த ராஜேஷ் தாஸ்?

ராஜேஷ் தாஸ் ஐஜியாக இருந்தபோது 2012ஆம் ஆண்டு தேவர் குருபூஜையில் உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து பேர் சுட்டு கொல்லப்பட கலவரத்திலும், முல்லை பெரியாறு விவசாயிகள் பிரச்னை, கூடங்குளம் பிரச்னையின்போது சட்டம் ஒழுங்கை முறையாக கையாளவில்லை எனக் கூறியும் தமிழ்நாடு அரசு இவரை பணியிட மாற்றம் செய்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ராஜேஷ் தாஸை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்தது.

இதற்கு எதிர்கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தது. ராஜேஷ்தாஸ் ஏற்கெனவே 2002 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய ராஜேஷ் தாஸ் மீது எதிர்ப்புகள் கிளம்பியதால் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

விசாகா கமிட்டி என்றால் என்ன?

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013ன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து வழக்கறிஞர் அகிலா கூறுகையில்,"விசாகா கமிட்டியில் தலைவராக பெண் அலுவலரை நியமனம் செய்து, சட்ட வல்லுநர், பெண் உரிமை செயற்பாட்டாளர் உள்ளிட்டோர் இந்த கமிட்டியில் இடம் பெறுவார்கள். விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விசாகா கமிட்டி 90 நாள்களுக்குள் முடிவடைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்கின் தன்மையை பொறுத்து குற்றவாளியை பணி நீக்கம் செய்ய அரசிடம் பரிந்துரைக்கலாம்.

ஏற்கெனவே ஐஜி முருகன் மீது பெண் ஐபிஎஸ் அலுவலர் அளித்த பாலியல் புகாரில் விசாகா கமிட்டி சரியான விசாரணையை நடத்தவில்லை என பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் நீதிமன்றத்தை நாடியதால் அந்த வழக்கானது தெலங்கானாவிற்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.

இவ்வாறு காவல் துறையில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே குற்றச்சாட்டுக்கு ஆளாகும் காவல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் விசாகா கமிட்டி நேர்மையான விசாரணை நடத்துமா அல்லது ஐஜி முருகன் வழக்கில் செய்தது போல கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்... விரைவாக நடத்த ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் கோரிக்கை!

Last Updated :Feb 26, 2021, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.