உள்ளாட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த பொய்யான தகவல் - திமுக கார்த்திகேய சிவசேனாபதி டிஜிபியிடம் புகார்

author img

By

Published : Sep 24, 2021, 8:27 PM IST

திமுக கார்த்திகேய சிவசேனாபதி டிஜிபியிடம் புகார்

சாதிய மோதல்களை உருவாக்கி, அதன் மூலம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் பொருட்டு தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை: திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராக இருப்பவர் கார்த்திகேய சிவசேனாபதி. இவர் இன்று(செப்.24) தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், " திமுகவில் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராகவும், காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறேன். எனது குடும்பம் கொங்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட குடும்பம். எங்களது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், எங்கள் குடும்பப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், எங்கள் பகுதியில் வாழும் இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சிலரால் பொய் செய்திகள் வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

குடும்பத்தாருக்கு மன உளைச்சல்

இதனால் என்னுடைய பொது வாழ்விற்கு களங்கமும், என்னுடைய குடும்பத்தாருக்கு அதீத மன உளைச்சலும் ஏற்படுகிறது. இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் சூழலை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக சந்தேகப்படுகிறேன். எனவே இதன் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

திமுக கார்த்திகேய சிவசேனாபதி டிஜிபியிடம் புகார்

சாதிப் பிரச்சனையை தூண்டும் பதிவு

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பெண்ணின் படத்தை பதிவிட்டு அவருடன் யாரோ ஒருவர் நிற்பதைப் போலவும், அந்த பெண் தன்னுடைய மகள் என்றும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாக ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது.

சாதிப் பிரச்சனையை தூண்டும் வகையில் இந்த பதிவானது பரப்பப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்க சமூக விரோதிகள் சிலர் நினைக்கின்றனர்.

பொய்யான தகவல்களை பரப்பிய 40 வாட்ஸ்அப் எண்களையும், இந்த செய்தி பகிரப்பட்ட சில வாட்ஸ்அப் குழுக்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரமாக காவல்துறைக்கு அளித்துள்ளளேன். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என டிஜிபி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.