ETV Bharat / state

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு; மருத்துவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

author img

By

Published : Aug 8, 2022, 1:58 PM IST

பொது சுகாதாரத் துறையின்கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேர நீட்டிப்பை திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு; மருத்துவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு; மருத்துவர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர், மருத்துவர். செந்தில் தலைமையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று (ஆக. 7) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ரவிசங்கர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க பொது சுகாதாரத்துறை பிரிவு மாநில செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் புலிகேசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், 'பல வருடங்களாக நடைமுறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை மாற்றி, தற்போது காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை என்று நீட்டித்து அரசாணை வழங்கியது மனித உரிமை மீறிய செயலாகும்' என சங்கத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், 'பெரும்பாலான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரம், நாள் ஒன்றுக்கு ஆறரை மணி நேரம் எனும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு 40 மணிநேரம் என்பது தேவையற்ற ஒன்று.

2009இல் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அரசால், பணி நேரம் குறித்து முடிவு செய்ய ஒரு சிறப்பு ஆலோசனை குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை என்று பணிநேரம் முடிவு செய்யப்பட்டு, இதுநாள் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதுபோன்று முறையாக ஆலோசனை செய்து பலமுறை விவாதித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கோரிக்கையின் பேரில் நாளொன்றுக்கு 7 மணி நேரம், அரை மணி நேரம் உணவு நேரம் உட்பட என்று இருந்து வந்ததை தற்போது இயக்குநர் தன் இஷ்டப்படி 8 மணிநேரமாக நீட்டித்தது வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் குறிப்பிட்ட பணி நேரம் என்று கருதாமல் இரவு பகல் பாராமல் எந்த நேரத்திலும் பணியாற்றி அரசாங்க திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதில் பெரும் பணியாற்றி வருகின்றனர். பணி நேரம் தாண்டியும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும், களப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மாலை 4 மணிக்கு பிறகும் call duty-யிலும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவை அனைத்தையும் கணக்கிட்டால் மத்திய ஊதிய குழு பரிந்துரையான வாரம் 40 மணி நேரம் என்ற காலக்கெடுவையும் தாண்டி பணி செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள் பணி நேரத்தை எவ்வித கலந்தாலோசனையும் இன்றி, தன்னிச்சையாக இயக்குநரின் கருத்துப்படி அரசாணை வெளியிட்டிருப்பது வருத்தத்தக்கது.

அரசாணை 225 உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், மருத்துவர் ஆலன் மேஜர் பணி மாறுதல் ஆணை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் அலுவலக ரீதியான whatsapp குழுக்களில் இருந்து வெளியேறுதல், மாவட்ட ஆட்சியர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ஆகியோர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை; துறை ரீதியான எந்த ஒரு அறிக்கையும் அனுப்புவதில்லை; ஞாயிறு அன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை புறக்கணிப்பது; தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டந்தோறும் ஆக. 8ஆம் (இன்று) தர்ணா போராட்டம் நடத்துவது; என கூட்டத்தின் முடிவில் மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மருத்துவர் விரோத அரசாணையை திரும்ப பெறாதபட்சத்தில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானித்து அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் சுடுகாட்டை மறித்து கட்டப்பட்ட அம்மா மினி கிளினிக் - மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.