ETV Bharat / state

’சாலையில் நடக்கும் மோதல்களுக்கு கட்சி பொறுப்பாகாது'-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Dec 4, 2021, 8:47 PM IST

அதிமுக உள்கட்சித் தேர்தல் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெற்று வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

jeyakumar press meet
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: அதிமுக கட்சியின் உள்கட்சித் தேர்தல் வரும் 7ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி மனு ஒன்றை அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் சில சமூக விரோதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், கட்சியின் உள்கட்சித் தேர்தல் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவிருக்கும் சூழலில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடைபெறவுள்ள கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தொடர்ந்து பேசிய அவர், உள்கட்சித் தேர்தலில் கட்சிப் பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களாக இருந்துவர வேண்டும், அவர்களை முன்மொழிய 15 கட்சி அடிப்படை உறுப்பினர்களும், வழிமொழிய 15 கட்சி அடிப்படை உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்பதே விதி என்ற அவர், அந்த தகுதி உடைய யார் வேண்டுமானாலும் கட்சிப் பொறுப்புகளுக்கு போட்டியிடலாம் என்றார்.

கட்சி பொறுப்பாகாது

அப்படி தகுதி இல்லாதவர்கள் போட்டியிட முயன்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே சாலையில் நடைபெற்ற பிரச்சனைகளுக்கு கட்சி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது எனவும், சாலையில் நடந்த கைகலப்பிற்கு தான் பதில் கூற முடியாது எனவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் யார் தூண்டுதலின் பேரில் இந்த பிரச்னைகள் நடைபெற்று வருகிறது என்பதை காவல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுகவில் இரண்டாவது நாளாக அடி உதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.