ETV Bharat / bharat

Fact Check; 'பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம்'.. உண்மை என்ன? - Fake Letter about Prashant Kishor

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 10:20 PM IST

Updated : May 30, 2024, 1:53 PM IST

Boom Fact Check: பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவிய செய்தியின் உண்மைத் தன்மை குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Fact checking a purported appointment letter of Prashant Kishor as BJP spokesperson
Fact checking a purported appointment letter of Prashant Kishor as BJP spokesperson (Credits - ETV Bharat Tamil Nadu)

ஹைதராபாத்: ஜன் சுராஜ் (Jan suraaj) அமைப்பின் தலைவரும், தேர்தல் வியூக ஆலோசகர் மற்றும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோர், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கடிதம் போலியானது என்பதை கிஷோரின் அலுவலகம் பூம்-க்கு (boom) உறுதிப்படுத்தியதோடு, ஜான் சுராஜ் இந்த உரிமைகோரலை தன் எக்ஸ் தளத்தின் மூலம் மறுத்துள்ளது.

நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சுமார் 300 இடங்களைப் பிடிக்கும் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். தொடர்ந்து கிஷோர், இன்ஸ்டாகிராமில் பத்திரிகையாளர் கரண் தாபருடனான தனது நேர்காணலைக் குறிப்பிட்டு, “தண்ணீர் அருந்துவது நல்லது, ஏனெனில் அது மனதையும், உடலையும் நீரேற்றமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தல் முடிவை பற்றிய எனது மதிப்பீட்டால் வருத்தம் அடைந்தவர்கள் ஜூன் 4ஆம் தேதி, அதிக அளவு தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். மே 2, 2021 -யும், மேற்கு வங்கத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் பரவி வரும் வைரல் கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரசாந்த் கிஷோரை பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “பாஜகவின் தேசியத் தலைவர் ஸ்ரீ ஜகத் பிரகாஷ் நட்டா, பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக ஸ்ரீ பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது" என கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை முகநூல் (Facebook) பயனர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், “ஜன் சுராஜ் இயக்கத்தின் நயவஞ்சகர் பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துகள்.. அவர் பீகாரை மாற்றத் தொடங்கினார், ஆனால் அவரே தற்போது மாறிவிட்டார்.. அவர் தொடங்கிய இடத்தை அடைந்துவிட்டார்..” எனும் பதிவுடன் பகிர்ந்திருந்தார்.

Screenshot of the fake letter
Screenshot of the fake letter (Credits - ETV Bharat Tamil Nadu)

உண்மை சரிபார்ப்பு: வைரலான இந்த கடிதம் போலியானது என்பதையும், பிரசாந்த் கிஷோர் பாஜகவில் சேரவில்லை என்பதையும் உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. இந்த வைரல் கடிதம் தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை கூகுல் சர்ச் (google search) மூலம் தேடி பார்த்ததில், அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் காண முடியவில்லை.

இந்த வைரல் கடிதம் குறித்த தகவலை மறுத்தும், அதனை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷை குற்றம் சாட்டியும், கிஷோர் தன் ஜான் சுராஜின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில் ஜெய்ராம் ரமேஷ் அந்த போலி கடிதத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது போன்ற ஸ்கிரீன் ஷாட்டுடன், காங்கிரஸ், ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் டெல்லி காவல்துறை ஆகியோரை டேக் (tagged) செய்து, “வேடிக்கையை பாருங்கள், காங்கிரஸ், ராகுல் காந்தியாகிய நீங்கள் போலிச் செய்திகள் பற்றி பேசி, அதனால் பாதிக்கப்படுவதாக கூறினீர்கள். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட முறையில் போலி ஆவணத்தை எப்படி பகிர்ந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்” என பதிவிட்டிருந்தார்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை குழுவால் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை.

உண்மை சரிபார்க்கும் குழு, பிரசாந்த் கிஷோரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஹர்ஷ்வர்தன் சிங் என்பவரை அணுகி கேட்டபோது, அவர் அந்தக் கூற்றை நிராகரித்து, அந்தக் கடிதம் போலியானது என்று கூறினார்.

"பிரஷாந்த் கிஷோருக்கு பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. அவரது முழுக் கவனமும் ஜன் சுராஜின் பணியை வலுப்படுத்துவதில் உள்ளது. பிரசாந்த் கிஷோர் பாஜகவில் இணைந்தார் என்ற போலிச் செய்தியை ஜான் சுராஜ் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் மூலம் மறுத்துள்ளது. இதுபோன்ற தவறான தகவலை காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் பரப்பி வருகிறார்" என ஹர்ஷ்வர்தன் சிங் கூறினார்.

மேலும், வைரலான கடிதத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. உண்மை சரிபார்ப்புக் குழு, சிங்கின் அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டு, அந்த வைரலான கடிதம் போலியானது என்பதை உறுதிப்படுத்தியது.

குறிப்பு: இந்த கட்டுரை முதலில் சக்தி கலெக்டிவ்வின் ஒரு பகுதியாக பூமில் வெளியிடப்பட்டு ஈடிவி பாரத் ஊடகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Fact Check; 'இந்தியாவிற்கு பாரமாக இருக்க வேண்டாம், பாகிஸ்தான் சென்று பிச்சை எடுங்கள்'.. முஸ்லீம்களை சாடினாரா யோகி ஆதித்யநாத்? உண்மை என்ன? - Clipped Video Of Yogi Adityanath

Last Updated : May 30, 2024, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.