ETV Bharat / state

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம்!

author img

By

Published : Feb 12, 2023, 9:05 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 19, 20 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். சிறுபான்மையினர் இல்லாத இடங்களில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

CH
CH

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தல் என்பதால், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் திமுக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்யவுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வரும் 19, 20 ஆகிய இரு நாட்களில் அண்ணாமலை பிரசாரம் செய்யவுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் பாஜகவினர் பிரசாரம் செய்வதை அதிமுகவினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 43,000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளதால், பாஜகவினர் பிரசாரம் செய்தால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்குமா? என கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்வது குறித்து பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் பிப்ரவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். சிறுபான்மையினர் இல்லாத இடங்களில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "ஈரோட்டில் அமைச்சர்கள் முகாமிட்டு பணப்பட்டுவாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" - பிரேமலதா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.