ETV Bharat / state

வேளாண் பட்ஜெட் ஒரு மாயத்தோற்றம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

author img

By

Published : Mar 21, 2023, 5:41 PM IST

வேளாண் பட்ஜெட் ஒரு மாயத்தோற்றம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
வேளாண் பட்ஜெட் ஒரு மாயத்தோற்றம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது எனவும், வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 - 2024ஐ இன்று (மார்ச் 21) நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த ஒரு பெரியத் திட்டங்களும் இல்லை.

வேளாண் பட்ஜெட்டை இரண்டு மணி நேரம் அமைச்சர் வாசித்தார். ஆனால், எந்த சிறப்பும் அதில் இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 195 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்குவது என்பது மிகப்பெரும் ஏமாற்று வேலை. கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், விவசாயிகளை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முறையாக ஆய்வு செய்யாமல் மிகக் குறைவான இழப்பீடு தொகையை வழங்கினார்கள்.

அறுவடை செய்த நெற்பயிர்களை, நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதால், பல லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை உள்ளது. வேளாண் பட்ஜெட் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பற்றி கூறும்போது, துரோகத்திற்கு அடையாளம் செந்தில் பாலாஜி என்றுதான் கூற வேண்டும். அவர் எத்தனை கட்சி மாறி வந்திருக்கிறார். திமுகவில் சீனியர்கள் இருக்கும்போது, குறுக்கு வழியில் முன்னுக்கு வந்துள்ளார், செந்தில் பாலாஜி. நான் ஒரே இயக்கத்தில் இருக்கிறேன். அதனால்தான் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளேன். இந்திய வரலாற்றிலேயே ஈரோடு போன்று ஒரு இடைத்தேர்தல் நடந்தது இல்லை. அது மிகப்பெரும் ஜனநாயக படுகொலை'' என்றார்.

மேலும் விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு வேளாண் பட்ஜெட் தள்ளி உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நம்மாழ்வார் விருதும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு புதிதாக இருந்தாலும், இயற்கை விவசாயத்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனப் பல்வேறு மாவட்ட விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் உபபொருட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியால், தனியார் கம்பெனிகள் மட்டுமே பயன்பெறும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Agri Budget 2023: வேளாண் நிதிநிலை அறிக்கை முக்கிய தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.