கரோனா கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக்கை மூடுக! - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jan 19, 2022, 12:12 PM IST

எடப்பாடி பழனிசாமி

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், கரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்துவருகிறது. இதை அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை திமுக அரசு வெளியிட்டது.

சந்தர்ப்பவாத திமுக அரசு

இந்தச் சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ராக்கெட் வேகத்தில் கரோனா தொற்று பரவுவதாக தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த்தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவருவதாக இந்த அரசே தெரிவிக்கிறது. உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதிமுக அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த பிப்ரவரி 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 775 பேர்தான் பாதிக்கப்பட்டனர்.

பேட்டியில் உறுதிசெய்த மா.சு

அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய இந்த திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்னும் பரப்புரையினை முன்னெடுத்தார். மேலும் ஸ்டாலின் உள்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கறுப்புக் கொடி, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இன்றைக்கு திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்திருப்பது என்ன நியாயம்? தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை, அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கூடி நிற்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

இதற்கு முன்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிய கரோனா நோய்த்தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து ஒன்பது நபர்களுக்குப் பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை இரண்டு நாள்களுக்கு முன்பு, மா. சுப்பிரமணியன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரட்டை வேட நிலைப்பாடு மாற்றம்?

தமிழ்நாடு மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்த திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது.

திமுக அரசு தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.