பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: அரசுக்கு ராமதாசு வலியுறுத்தல்

author img

By

Published : May 23, 2023, 4:58 PM IST

Etv Bharat

'வெயிலின் கொடுமையில் இருந்து மாணவர்களைக் காக்க தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்' பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: வெயிலின் கொடுமையில் இருந்து மாணவர்களைக் காக்க தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளது என்னவென்றால், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று 'பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி' அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில் ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன.

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 2,99,558 பேர் விண்ணப்பம்!

அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2ஆவது வாரத்திற்குப் பிறகு தான் அப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜுன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.

கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்" இவ்வாறாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.