ETV Bharat / state

9 - 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

author img

By

Published : Oct 11, 2021, 4:02 PM IST

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

கரோனா தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, ஒன்பது முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தயார்நிலையில் புத்தாக்க பயிற்சி கட்டகம்

இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் ஒன்பது, 10ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், ஆகிய பாடங்களுக்கும், தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு

9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் மதிப்பீட்டுத் தேர்வை வரும் 12ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் ஒருமணி நேரம் கால அவகாசம் வழங்கி நடத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழு மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு முடிந்த பின்னர் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து இணைய வசதியைப் பயன்படுத்தியும் இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். இதற்கான உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு விண்ணப்பங்களைத் திருத்த காலக்கெடு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.