வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை - கணவர் கைது

author img

By

Published : Jul 4, 2022, 3:59 PM IST

கைது

சென்னையில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தற்கொலையால் உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55) - அம்மணியம்மால் (50) தம்பதியினரின் மகள் அருந்ததி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, மீனாட்சி பொறியல் கல்லூரியில் படித்து வந்தார். அவர் படிக்கும்போது அதே கல்லூரியில் படித்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது சாதிக் இப்ராஹிம் என்பவரை காதல் திருமணம் செய்தார். பின் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அருந்ததியின் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக அவரின் பெற்றோர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டிற்கு சென்று நகை பணம் உள்ளிட்டவை வாங்கி வரும்படி அடித்து கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலையால் இறந்த இளம்பெண்
தற்கொலையால் இறந்த இளம்பெண்

இந்த நிலையில் அருந்ததியின் பெற்றோர் சுமார் 4 சவரன் நகையை அருந்ததிக்கு கொடுத்துள்ளனர். ஆனால், அந்த நகையை அவரின் கணவர் அடகு வைத்து செலவு செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று அதிகப்படியான நகைகள் பணங்களை வாங்கி வரும்படி தொடர்ச்சியாக கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல
இதற்கிடையே அருந்ததி, கடந்த 22 ஆம் தேதி அவரின் வீட்டிலிருந்து தப்பி ஓடி நொளம்பூரில் அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரின் கணவர் மற்றும் மாமியார் வீட்டிற்கு வரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முகமது சாதிக் இப்ராஹிம் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அருந்ததிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகாரைத் திரும்ப பெறுகிறேன்; இருவரும் இணைந்து ஒன்றாக வாழலாம் எனக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, மீண்டும் அருந்ததி அவரின் கணவருடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து அருந்ததி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருந்ததியின் தந்தை முருகன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருப்பதால் ஆர்.டி.ஓ பிரவீனா குமாரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக அருந்ததியின் கணவரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சாதிக் இப்ராஹிமை (25) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உலகப் பெண்கள் தினம்! - பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.