தமிழகத்திற்கு 7 மருத்துவ கல்லூரி வேண்டும் - மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை!

author img

By

Published : Nov 15, 2022, 12:46 PM IST

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ் ()

மத்திய அரசின் 100 மருத்துவக் கல்லூரி திட்டத்தில் தமிழகத்திற்கு 7 கல்லூரிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்திற்கு 7 கல்லூரிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளில், செவிலியர் கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அத்தியாவசியத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனான இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தது.

மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 93 மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளும் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இத்தகைய சூழலில் தான் நான்காவது கட்டமாக 100 மருத்துவக் கல்லூரிகளை 2027-ஆம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.

புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் தமிழ்நாட்டிற்கு உரிய பிரதிநித்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர், புதிதாக உருவாக்கப்பட்ட இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி என்றாலும் கூட, அது அரசால் அமைக்கப்பட்டதில்லை; அண்ணாமலை பல்கலைக்கழகத்திடமிருந்து நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது ஆகும்.

அதுமட்டுமின்றி, கடலூர் மாவட்டத் தலைநகரில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லை. இந்த குறையை போக்கும் வகையில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவிருக்கும் 100 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 7 கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியுடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டப்படி, மாவட்டத் தலைநகர அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு கல்லூரியும் ரூ.325 கோடியில் அமைக்கப்படும். இதில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்காகவும், 40 சதவீதம் மாநில அரசின் பங்காகவும் இருக்கும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு குறைந்தது 16 மருத்துவக் கல்லூரிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடைக்கவில்லை. மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வலியுறுத்தினேன்.

அதையடுத்து முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல. அதற்கு இன்னும் 6 மருத்துவக் கல்லூரிகள் தேவை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திமுக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் கூட, அனைத்து கல்லூரிகளும் ஒதுக்கப்பட்டு விட்டதால், அதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறி விட்டது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வி கற்பது தமிழ்நாட்டில் தான். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் தமிழகத்தில் தான். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் பயில விரும்புவதும் தமிழகத்தில் தான். கடந்த முறை ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை குறித்த காலத்தில் கட்டமைத்து வகுப்புகளைத் தொடங்கியதும் தமிழ்நாடு தான். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உண்டு.

எனவே, மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத 6 மாவட்டங்கள் மற்றும், கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.