ETV Bharat / state

தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பொறுப்பு - ஓ. பன்னீர் செல்வத்திற்கு செக் வைக்கிறதா திமுக?

author img

By

Published : Oct 4, 2020, 7:51 PM IST

Updated : Oct 7, 2020, 3:33 PM IST

தேனி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்காகப் பிரித்து தேனி வடக்கிற்கு தங்க தமிழ்செல்வனை பொறுப்பாளராக நியமித்துள்ளது திமுக தலைமை. இதன் மூலம் ஓ. பன்னீர் செல்வத்திற்கு திமுக செக் வைத்திருக்கிறாதா என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

Thanga Tamil Selvan  Thanga Tamil Selvan dmk posting
தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பொறுப்பு... ஓ. பன்னீர் செல்வத்திற்கு செக் வைக்கிறதா திமுக

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் , துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொகுதி தேனி மாவட்டத்திற்கு திமுக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக திமுக நிர்வாகிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் சரியாக 7 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடங்கி கட்சியில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. கட்சியின் நிர்வாக வசதிக்கேற்ப மாவட்டங்கள் இரண்டு, மூன்று அல்லது நான்காக பிரித்து தனித்தனியாக பொறுப்பாளர்களை திமுக கட்சி நியமித்துவருகிறது.

அதன்படி, தேனி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனையும், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணனையும் நியமித்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன், கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். மக்களவைத் தேர்தலோடு 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதில், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக டிடிவி தினகரனிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாகவும், ஆனால், அவரை தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வைத்ததுமே அவரின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. ஏனென்றால், தங்க தமிழ்ச்செல்வன் மூன்று முறை ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தேனியில் ஓபிஎஸின் செல்வாக்கு அதிகம் என்பதாலே அவர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பொறுப்பு - ஓ. பன்னீர் செல்வத்திற்கு செக் வைக்கிறதா திமுக

மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய அவர், பின்னர் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த சில நாட்களிலே அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்தது. பதவிக்காக திமுகவில் சேரவில்லையென அவர் கூறினாலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தார் என்றே கூறலாம். ஆனால், தற்போது, ஓபிஎஸுக்கு எதிராக அவரை நிற்கவைத்துள்ளது திமுக தலைமை. எம்ஜிஆர் காலம் முதல் இன்றுவரை அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனியில், 2014, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதோடு 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்திலே தோல்வியைச் சந்தித்து.

இந்தச்சூழ்நிலையில், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய இருதொகுதிகளை தேனி தெற்கு மாவட்டமாக பிரித்து கம்பம் ராமகிருஷ்ணனையும், போடி, பெரியகுளம்(தனி) ஆகிய தொகுதிகளை தேனி வடக்கு மாவட்டமாக பிரித்து தங்க தமிழ்செல்வனையும் மாவட்ட செயலாளராக நியமித்துள்ளது. பெரியகுளம் தனித்தொகுதியாக இருப்பதால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்க தமிழ்செல்வனுக்கு போடி தொகுதியே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன், " அதிமுக கட்சியில் களபணியாளராக இருந்த தங்க தமிழ் செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி அளித்தபோது அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியம் இருந்திருக்கும். அதை தற்போது சரிசெய்யும் விதமாக தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தேனி மாவட்ட பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தங்க தமிழ்செல்வனும் இரண்டுமுறை ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அவரது சொந்த ஊரும், தொழில் செய்யும் இடமும் கம்பம் ஒட்டிய பகுதியிலே உள்ளது.

ஆனால், ஆண்டிபட்டி, கம்பம் உள்ளடக்கிய தெற்கு தேனி பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஓ. பன்னீர் செல்வம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள போடிநாயக்கனுர் தொகுதியை தங்க தமிழ்செல்வனிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நியமனம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலோட்டமாக பார்த்தால் தங்க தமிழ்செல்வன் சார்ந்த சமுதாயம் போடிநாயக்கனூர் தொகுதியில் குறைவு. அதை மட்டும் வைத்து அரசியல் செய்யும் நபர் அவர் இல்லை. தேனி மாவட்டம் முழுவதுமே அறியப்பட்டவர் தங்க தமிழ்செல்வன் என்றாலும் திருநெல்வேலியை அடுத்து திமுகவில் அதிக உட்கட்சி பூசல் உள்ள இடம் தேனிதான்.

இவை அனைத்தையும் அவர் சமாளித்து அவரது அதிரடி அரசியல் பாணி, திமுக கட்சிக்கு எவ்விதத்தில் உதவும் என்பதையும், பன்னீர் செல்வத்துக்கு சவாலாக அமைவாரா என்பதையும் நாம் பொறுத்திருந்ததான் பார்க்கவேண்டும்" என்றார்.

தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகத்தில் மாற்றங்கள் இவ்வாறு இருக்க சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலும் திமுக மாற்றங்களை செய்தது. அதன்படி சேலம் மாவட்டம் மத்தி, கிழக்கு, மேற்கு என பிரித்து தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாற்றங்கள் செய்தாலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதியில் திமுக தலைமை அதிக கவனம் செலுத்திவருவது கவனிக்கத்தக்கது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: 7ஆம் தேதி ஒருமனதாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

Last Updated : Oct 7, 2020, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.