ETV Bharat / state

கஜா புயலின் போது மாமன்னர் வீட்டில் விஷேசம்.. தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறார் - ஈபிஎஸ்யை விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 10:45 PM IST

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி கண்டனம்
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி கண்டனம்

DMK RS Bharathy Statement: தோல்வி மேல் தோல்வியையே தன் கட்சிக்குப் பரிசாக அளிக்கும் தோல்வி சாமி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிப் பேச அருகதை இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு, முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துப் பேசியதை எதிர்த்து திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “சேலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து எப்போதாவது வெளியில் வந்து முகத்தைக் காட்டி விட்டு மீண்டும் வீட்டுக்குள் பதுங்கிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருப்பவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத் திருவாய் மலர்ந்து பேட்டிகள் கொடுப்பார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னால் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்ட பழனிசாமி, தோல்வியை மட்டுமே தனது கட்சிக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்.

சென்னையைச் சுற்றிலும், நெல்லையைச் சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்கி மக்கள் பணி செய்ய மனமில்லாமல், பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்குக் கச்சேரியை நடத்தி முடித்திருக்கிறார் பழனிசாமி. அதில் கழக அரசைப் பற்றி வாய்க்கு வந்ததை வழக்கம் போல உளறி இருக்கிறார்.

"நான் சில விஷயங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகாருக்கு சென்று விடுவார். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டு விட்டேன். முதல்வராக என் கையெழுத்து இல்லாமல் ஒரு கோப்பும் சென்றது இல்லை" என அதிமுக பொதுக்குழு நடந்த அன்று ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே. அந்த ரகசியங்களை எடப்பாடி சொல்வாரா? அப்படி என்ன டீலிங் நடைபெற்றது? "பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டோம்" என பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பாஜகவை விமர்சிக்க வேண்டியதுதானே. அதிமுகவை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றிய அரசைக் கண்டித்தோ அல்லது பாஜக-வைக் கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களில் 'கண்டனம்', ஒன்றிய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் 'வலியுறுத்தல்' என்பது இரட்டை முகமூடிதானே.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகக் கழக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாகக் கருத்து தெரிவித்துப் பேசியிருக்கிறார் பழனிசாமி. புயல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநாடு நடத்த வேண்டாம் என்று எங்கள் தி.மு.க கழகத் தலைமை முடிவெடுத்ததைப் பழனிசாமி பாராட்டி இருக்க வேண்டும்.

ஏதோ தான் சாபம் விட்டதைப் போலச் சவடால் விட்டுள்ளார் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையே டிவியைப் பார்த்துத் தெரிந்து கொண்டவர் பழனிசாமி. அதனால் அவர் டிவி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இளைஞர் அணி மாநாடு 2 முறைதான் தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் மக்களுக்காக! சென்னை வெள்ளம் ஏற்பட்ட போதும் தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு உண்டானபோது ஆட்சியில் இருக்கும் திமுக முதலில் மக்களுக்குத்தான் சேவை செய்யும். கட்சி மாநாடு இரண்டாம்பட்சம்தான்.

மதுரை அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு மோசமான வகையில் உணவு வழங்கப்பட்டதால் அண்டா அண்டாவாக உணவைத் தரையில் கொட்டி விரயமாக்கியது எல்லாம் மறந்துவிட்டதா. தவழ்ந்து சென்று முதல்வரான எடப்பாடிதான் அரசியலில் கற்றுக்குட்டி. கஜா புயல் டெல்டாவைத் தாக்கியபோது சேமூர் அம்மாபாளையத்தில் மாமனார் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்த பழனிசாமி எல்லாம் வெள்ள பாதிப்புக் களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்.

'எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில், சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்கள் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்த தீர்மானப் புத்தகத்தில் இது இல்லை. ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை மறந்துவிட்டதால் அதனைத் தீர்மானப் புத்தகத்தில் சேர்க்கவில்லை. கடைசி நேரத்தில் யாரோ நினைவுபடுத்த வேறு வழியில்லாமல் சிறப்புத் தீர்மானம் என்ற பெயரில் தனியாகக் கொண்டு வந்து தொண்டர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

2022 நவம்பர் 30ஆம் தேதிதான் ஜானகி அம்மாளின் 100ஆவது பிறந்தநாள். அந்த நூற்றாண்டைக் கூட கொண்டாட முடியாமல் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் பிரிந்து சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் நடந்து வந்தபோது ஜானகி அம்மாளை மறந்துவிட்டு திடீரென தேர்தல் நேரத்தில் ஜானகி அம்மாளின் நூற்றாண்டைக் கொண்டாட நினைக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜானகி அம்மாள் 100-ஆவது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடந்த ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். ஜானகி அம்மாள் நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். ஜானகி அம்மாளை வாழ்த்தியும் பேசினார். ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவே முடிந்த பிறகு திடீரென எந்த போதி மரத்திலோ ஞானோதயம் பெற்று அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் அறிவித்திருக்கிறார்.

காவிரி நதிநீர் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுந்தபோது, தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தைத் தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக உறுப்பினர்கள் முடக்கினார்கள்" என சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பழனிசாமி சொல்லும் அந்த நிகழ்வு நடந்தது 2018 மார்ச் மாதம் நடந்தது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்துத் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அப்போது கொண்டு வந்தனர்.

அதனை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். "அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங் உள்ளது" என்று அன்றைக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில்தான் "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம்" எனச் சொன்ன கே.சி.பழனிசாமியை மின்னல் வேகத்தில் கட்சியைவிட்டு நீக்கி மோடி விசுவாசத்தை காட்டினார் பழனிசாமி.

எனவே காவிரிக்காக நாடாளுமன்றத்தை முடக்கினோம் என அவர் சொன்னதும் பச்சைப் பொய்யே ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து அவதூறான பல குற்றச்சாட்டுகளைப் பழனிசாமி வைத்துள்ளார். பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். சசிகலாவின் பொம்மையாக எடப்பாடி முதலில் இருந்தார். டிடிவி தினகரனின் பொம்மையாக மாறினார். பின்னர் மோடியின் பொம்மையாக மாறினார்.

கமலாலயத்தில் ஒரு அறையில் அதிமுக அலுவலகத்தை நடத்தி கொள்ளும் வகையில் பாஜகவுக்கு அடிமையாக சேவகம் செய்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இப்போதும், அமித் ஷா ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மையாகச் செயல்பட்டு வருபவர்தான் பழனிசாமி என்பதை அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள். அதிமுக ஆட்சி எப்போது வரும் என்ற மன நிலையில் மக்கள் இருப்பதாக பழனிசாமி பேசி இருக்கிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என 8 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க.

தோல்வியைத் தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிசாமி. அவரால் அதிமுகவை அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியைத் தழுவி 'தோல்விசாமி' என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நல்ல முறையில் கேட்டாலே நிதி கிடைக்காது; போகிற போக்கில் கேட்டால் கிடைக்குமா? - எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.