ETV Bharat / state

"ரெய்டு நடவடிக்கைகளால் பாஜகவுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட நிலை தான் தொடரும்" - ஆர்.எஸ் பாரதி விளாசல்!

author img

By

Published : Jul 17, 2023, 4:05 PM IST

DMK RS
காஷ்மீர்

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காகவே அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாஜகவுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை: சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று(ஜூலை 17) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையைப் பார்வையிட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேரில் வந்தார். ஆனால், அமலாக்கத்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ் பாரதி, "மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் விழாவில் மத்தியில் யார் பிரதமராக வேண்டும் என்பது முக்கியமல்ல, யார் பிரதமராக ஆகக்கூடாது என்பதைத்தான் முடிவு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

அதிலிருந்து தொடர்ச்சியாக மத்திய அரசு தமிழக அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அது தொடர்பான வழக்கும் தொடர்ச்சியாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகின்ற சூழ்நிலையில், தற்பொழுது உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி மற்றும் மக்களவை உறுப்பினராக இருக்கக் கூடிய அவரது மகன் கௌதம் சிகாமணியுடைய இல்லங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக மக்களை திசைதிருப்புவதற்காக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

நான் ஒரு வழக்கறிஞர், இருப்பினும் என்னிடமே இந்தச் சோதனை எதன் அடிப்படையில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்குத் தொடரப்பட்டது. அப்படி பார்க்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அமலாக்கத்துறையினருக்கு இது போன்ற சோதனை நடத்த அதிகாரம் இருக்கின்றதா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை அமலாக்கத்துறை தரப்பில் போடப்பட்ட வழக்கில் நூறில் இரண்டு கூட நிரூபிக்கப்படவில்லை.

இதேபோன்று கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டார்கள். அதன் பின்பும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எப்படி படுதோல்வி அடைந்ததோ, அதேபோன்று வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படுதோல்வி அடையும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.