ETV Bharat / state

'குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும்' எம்.பி டி.ஆர்.பாலு!

author img

By

Published : May 20, 2021, 10:58 AM IST

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும்
குரோம்பேட்டை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படும்

செங்கல்பட்டு மாவட்டத்தில், நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வசதியாக, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் எண்ணிக்கை, மையங்களை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிகள், மருத்துவமனை வளாகங்கள் ஆகியவற்றை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றிவருகின்றனர்.

கரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சித்தா மருத்துவ முறையும் கையாளப்பட்டு, சித்தா மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்திடும் வகையில், பல்வேறு இடங்களில் சித்தா மருத்துவமனையும் திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில், 150 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

அந்த சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்துவைத்தார்.

சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம்!
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு," செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,404 படுக்கைகள் இருக்கின்றன.

இதில் ஆக்ஸிஜன் வசதியுடைய 824 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 3,662 படுக்கைகள் உள்ளன. அதன்படி, மொத்தம் 5,066 படுக்கைகள் இருப்பதாகவும், 3,302 ஆக்ஸிஜன் படுக்கைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளன.

மாவட்ட ஆட்சியரும், தனியார் துறையினரும் கரோனா தடுப்பு பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டது. அதற்காக அமைச்சர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். இந்த ஆட்சி மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முயற்சியால் ஒரு வார காலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் படுக்கைகள் திறக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ’தமிழ்நாட்டின் கல்விச் சூழலுக்கு பல விதங்களில் இயக்குநர் பதவி அவசியமானது’ - திருமாவளவன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.