ETV Bharat / state

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்.. பின்னணி என்ன?

author img

By

Published : Jul 26, 2023, 12:30 PM IST

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சிவபத்மநாதன் விடுவிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தென் மாவட்டத்தில் இருந்து மேலும் ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DMK General Secretary Durai Murugan change Tenkasi district secretary due to internal party conflict
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசின் மெத்தனமான போக்கை கண்டித்து தமிழக முழுவதும் திமுக மகளிர் அணி சார்பாக நேற்று முன்தினம் (ஜூலை 24) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 23ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனுக்கும் மகளிர் அணியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதில், திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தாங்கள் மணிப்பூர் சம்பவத்தை குறித்து பேச வேண்டாம் எனவும் மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தமிழ்ச்செல்வி ஆர்ப்பாட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.

இந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. மேலும் சமீப காலமாக தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் உட்கட்சி பூசல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்தும் மாவட்ட செயலாளருக்கும், மாவட்ட ஊராட்சி தலைவிக்கும் இடையே நடந்த மோதல்கள் குறித்தும் கேட்டிருந்தார் என கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு, கனிமொழி பரிந்துரை செய்துள்ளார்.

இந்த நிலையில், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சிவபத்மநாதன் விடுவிக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வரும் பொ.சிவபத்மநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக, சுரண்டை நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்டக் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளருக்கும், மாநகர மேயருக்குமான மோதல் திமுக தலைமையிடம் வரை சென்றிருந்தது. மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் மாநகர மேயர் சரவணனை கட்டுக்குள் வைப்பதற்காக அவரது ஆதரவு கவுன்சிலர்களை வைத்து மாநகராட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இந்த உட்கட்சி பூசல் காரணமாக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்பாகவே இருவரது ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரத்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - சுற்றுலாத்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.