ETV Bharat / state

தலித் மக்களை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி வீடியோ.. கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை

author img

By

Published : Jan 30, 2023, 4:28 PM IST

Updated : Jan 30, 2023, 6:19 PM IST

தலித் மக்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சேலம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தலித் மக்களை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.மாணிக்கம் திருமலைகிரி கிராமத்தைச் சார்ந்த பட்டியலின இளைஞர் பிரவீன் என்பவரையும், கிராமத்து மக்களையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுவதும், ஊரை விட்டே விரட்டி விடுவேன் என்று அச்சுறுத்துவதும், சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனையறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் சென்றால் கோயில் தீட்டாகிவிடும் என்றும் சாதி இந்துக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கூறி, ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சிமன்ற தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ஆம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்துப் பேசியதோடு, கிராமத்து மக்களைக் கிராமத்து விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டுகிறார்.

இதன் மீது சேலம் மாவட்டக் காவல் துறையும், மாநில காவல் துறையும், மாநில நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு திமுக ஒன்றிய செயலாளரை எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, எங்கிருந்தாலும் கைது செய்ய வேண்டும். இவ்வளவு கொடூரமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடிய, தலித் மக்களுடைய வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளியேற்ற வேண்டும்.

மேலும், ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோயிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும் என அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையில், சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என அதில் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வன்மையாகக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் பகிரங்க மன்னிப்பு... திருப்பத்தூரில் நடந்தது என்ன?

Last Updated : Jan 30, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.