ETV Bharat / state

திமுக உட்கட்சித் தேர்தல் - அறிவாலயம் முன்பு திமுக நிர்வாகிகள் திடீர் போராட்டம்

author img

By

Published : Sep 25, 2022, 9:08 PM IST

திமுக உட்கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றபோது, அறிவாலயம் முன்பு திமுக நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Dmk
Dmk

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது உட்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான பதவிகளுக்கான வேட்மனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. கடந்த 22ஆம் தேதி தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று (செப்.24) நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று (செப்.25) புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. 72 மாவட்டங்களிலிருந்து சுமார் 800 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் வெற்றி பெற்ற மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன் பிறகு திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும்.

முன்னதாக இன்று மாவட்டச் செயலாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரையின் ஆதரவாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தாமலேயே செல்லதுரைக்கு பதிலாக, எம்.பி தனுஷ் குமாரை மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி அண்ணா அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி மாவட்ட செயலாளரை தேர்வு செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் போராட்டக்காரர்களை அணுகி, கோரிக்கைகளை முறையாக தலைமைக்கு தெரிவிக்கும்படியும், அதன் பின்பு தலைமை முடிவெடுக்கும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:உலகின் 21 மொழிகளில் பெரியார் வரலாறு - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.