ETV Bharat / city

உலகின் 21 மொழிகளில் பெரியார் வரலாறு - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 25, 2022, 4:40 PM IST

Etv Bharatஉலகின் 21 மொழிகளில் பெரியார் வரலாறு - முதலமைச்சர் ஸ்டாலின்
Etv Bharatஉலகின் 21 மொழிகளில் பெரியார் வரலாறு - முதலமைச்சர் ஸ்டாலின்

பெரியாரின் வரலாறை உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் வரலாறை உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.

பின்னர் இது குறித்துப் பேசிய அவர், ''பெரியார் உலகமயம் - உலகம் பெரியார்மயம்’ - என்ற உன்னதக் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடந்த 17-ஆம் நாள்தான் ‘பெரியார் உலகம்’ என்ற மாபெரும் முன்னெடுப்பைச் செய்தார்.

கடந்த செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல நாடுகள் கொண்டாடி இருக்கின்றன. இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை'' என கூறினார்.

"மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை 'தமிழ் மரபுத் திங்கள்' என்று அறிவித்த ஒரே நாடு, கனடா! அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமானது! தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது", என கூறினார்.

''தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள். பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக அவர் சொல்லி இருந்தார். தமிழ் மரபுத் திங்கள் - மசோதா கனடா நாடாளுமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது, என குறிப்பிட்டார்.

தமிழுக்கும் தமிழர்க்கும் இத்தகைய பெருமையைச் சேர்த்த கனடா நாட்டின் பிரதமர் அவர்களையும் இதற்கு காரணமான கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கனடா தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்கிறேன்.

நம்மை ஒளி இணைத்துக்கொண்டு இருக்கிறது என்பதைவிட, நம்மைப் பெரியாரின் ஒளி இணைத்துக்கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாநாடு மனிதநேய சமூகநீதி மாநாடாக கூட்டப்பட்டுள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான். சமூகநீதிக் கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் திருக்குறளைத் தீட்டி இருந்தாலும் -அவரின் குறள்கள் இன்று உலகில் 125-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தாலும் இன்றைய நாள் உலகச் சிந்தனையாளராகப் போற்றப்படுகிறார் தந்தை பெரியார் அவர்கள். அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் வரலாறை உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழைப் புறக்கணிக்கிறதா சென்னை மாநகராட்சி? ; பொதுமக்கள் அதிருப்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.