ETV Bharat / state

"அரசு வழக்கறிஞர் காவல்துறையின் வழக்குறிஞர் அல்ல!" - ஆலோசனை கூட்டத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரை

author img

By

Published : Jun 17, 2023, 5:42 PM IST

சில வழக்குகளில் ஜாமீன் வழங்குவது தவறு என்று கருதும் போது ஜாமீன் வழங்கக்கூடாது - அசன் முகமது ஜின்னா
சில வழக்குகளில் ஜாமீன் வழங்குவது தவறு என்று கருதும் போது ஜாமீன் வழங்கக்கூடாது - அசன் முகமது ஜின்னா

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீன் தருவது தவறு என கருதப்படுகின்ற சமயத்தில் ஜாமின் கொடுப்பதற்கு ஆட்சேபணை செய்யப்பட வேண்டும் என பேசியுள்ளார்.

சில வழக்குகளில் ஜாமீன் வழங்குவது தவறு என்று கருதும் போது ஜாமீன் வழங்கக்கூடாது - அசன் முகமது ஜின்னா

சென்னை: அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீன் தருவது தவறு என கருதப்படுகின்ற சமயத்தில் ஜாமின் கொடுப்பதற்கு ஆட்சேபனை செய்யப்பட வேண்டும் என பேசியுள்ளார்.

அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டமானது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் இன்று (17.06.2023) தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதனை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர்களாக அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை நடத்திய வழக்குகள் மற்றும் இவ்வழக்குகளில் அவர்கள் குற்றவாளிகளுக்கு பெற்றுத் தந்த தண்டனைகள் மற்றும் விடுதலைக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளைச் சீரான முறையில் நடத்திடத் தேவையான உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பு தொகுப்புகளை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் பேசிய போது அவர், “குற்ற வழக்குகளை நடத்தும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் குற்ற வழக்குகளை நடத்தும்போது தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வழக்கினை நடத்தாமல் “நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” அதே சமயத்தில் “குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது” என்கிற எண்ணத்தோடு வழக்குகளை நடத்த வேண்டும்.

அரசு குற்ற வழக்குரைஞர் காவல்துறையின் வழக்குரைஞர் அல்ல! அவர்கள் பொதுமக்களுக்கான வழக்குரைஞர்கள் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு சில காவல் அதிகாரிகள் ஜோடித்து போடும் பொய் வழக்குகளுக்குத் துணை போகாமல் நீதிமன்றம் மற்றும் பொதுமக்களுக்கு உண்மையை கண்டறிவதற்கு அரசு வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். வழக்குகளை நடத்தும்போது காவல்துறையினர் எவரேனும் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது அந்த மாநகரத்தின் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடில் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் காவல் துறை மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண அந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதல் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 321-வது பிரிவின்படி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் எந்த நிலையிலும் ஒரு வழக்கை திரும்ப பெறுகிற அதிகாரம் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கு உள்ளதால் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் வழக்கு திரும்ப பெறுகிற அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீன் தருவது தவறு என கருதப்படுகின்ற சமயத்தில் ஜாமின் கொடுப்பதற்கு ஆட்சேபனை செய்யப்பட வேண்டும். மேலும், ஆட்சேபனைகளை மீறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் அதனை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வப்போது, சட்டக் கருத்துக்களை (Legal Opinion) உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தாமதம் செய்தால் மேல் முறையீடு செய்வதில் தாமதம் நிகழும். எனவே நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்காது உரிய காலத்திற்குள் கேட்கப்படும் சட்டக் கருத்துக்களை அனுப்பி வைக்கவேண்டும். மேலும் வருங்காலங்களில் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர்களின் பணிகள் அவ்வப்பொது ஆய்வு செய்யப்படும். திருப்திகரமாக பணி ஆற்றாதவர்கள் பற்றிய விபரங்கள் உரிய மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பப்படும். எனவே, பணியில் முழுக் கவனம் செலுத்தி நீதிமன்றங்களுக்கு சரியான முறையில் உதவி செய்ய வேண்டும்.

குற்றவியல் நீதி அமைப்பில், குற்றவாளிகளை விசாரிக்கும் பொறுப்பு அரசுக்கு இருப்பதால், நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும், நீதிமன்ற அதிகாரியாகவும் தாங்கள் செயல்படுவதால் மிகுந்த பொறுப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் தங்கள் பணிகளில் முழு கவனம் செலுத்தி நீதிமன்றங்களுக்கு நீதியை நிலைநாட்டிட சரியான வகையில் உதவி செய்திட வேண்டும் என்று தங்களை கேட்டு கொள்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

ஆய்வுக் கூட்டம் நிறைவுற்றப் பின்னர், அசன் முகமது ஜின்னா, தலைமையில் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள், தமிழ்நாடு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஜி.தேவராஜ், விழுப்புரம் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர் ட்டி.மணிவண்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் குற்றவியல் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் பிற குற்றவியல் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூடியூபர் போல மிரட்டுகிறார் முதல்வர் - நாராயணன் திருப்பதி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.