ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்.. ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானது - டிஜிபி சங்கர் ஜிவால்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 6:15 AM IST

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்

DGP Shankar Jiwal: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானது என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்ற ரவுடியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல, பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது சிறையில் இருந்த கருக்கா வினோத் கடந்த சனிக்கிழமை ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஆனால் இவரின் குடும்பத்தார் தரப்பில் இருந்து, இவரை சிறைக்குச் சென்று பார்க்கவோ, ஜாமினில் எடுக்கவோ இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கருக்கா வினோத் ஜாமினில் வெளியே வந்தது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், மற்றொரு வழக்கில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சிலர் ஜாமின் பெற்று வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், அவர்களுக்கு பின்னால் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து, கருக்கா வினோத்தின் உறவினர்கள் யாரும் அவரை ஜாமினில் எடுக்காத நிலையில், சம்பந்தமே இல்லாத 70 வயது உடைய ஆணும், பெண்ணும் கையெழுத்து போட்டு, அதற்குரிய பணத்தைக் கட்டி, வழக்கறிஞர்களை வைத்து கருக்கா வினோத்தை ஜாமனில் வெளியே அழைத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

எனவே யார் சொல்லி, எதற்காக ஜாமினில் எடுத்தார்கள் என்கின்ற விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும், சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுடன், ரவுடி கருக்கா வினோத் சென்றது எதிர்ச்சியாக நடந்தது எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத்தை ஜாமினில் வெளியே எடுத்தது பாஜக திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என திமுக ஐடி விங்கின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, தான் பாரதிய ஜனதாவில் இல்லை என வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் மறுத்துள்ளார்.

மேலும், தன்னைக் கேட்காமல் நண்பர்கள் கட்சியில் சேர்த்ததாகவும், தான் மறுத்த பிறகு தன்னைக் கட்சியில் இருந்து விடுவித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிறைக்கு கைதிகளை பார்க்கச் சென்ற தனது ஜூனியர் வழக்கறிஞர்கள் இருவர்தான், கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்படாமல், முழுமையாக விசாரணை நடத்தாமல், அவசரகதியாக ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் அடைத்து வழக்கையே கொன்று விட்டதாக, ராஜ்பவனில் இருந்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், இந்த வழக்கு முழுமையாகவும், விரிவாகவும் விசாரிக்கப்படும் எனவும், ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் சொல்லி இருப்பது போன்று பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என்றும், முன்பு ஆளுநர் வாகனத்தின் மீது கட்டை மற்றும் கற்களால் தாக்குதல் நடந்ததாகக் கூறுவதும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கருக்கா வினோத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு; முன்னாள் ஐஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.