ETV Bharat / state

தூத்துக்குடியில் வளர்ச்சித் திட்டம்: தமிழ்நாடு அரசு - HCL அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்!

author img

By

Published : May 3, 2023, 7:58 PM IST

Tuticorin plan
தூத்துக்குடி திட்டம்

தூத்துக்குடியில் 95 கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் HCL அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் 95 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1,40,000 பேருக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களின் சிறந்த வருமானத்திற்கு இத்திட்டம் வழிவகுக்கும்.

இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச்செயலாளர் அமுதா, மற்றும் HCL அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

HCL Samuday திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 42,000 வீடுகளில் அடிப்படைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தேவையான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை கிராம வளர்ச்சித் திட்டங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கிராம சமூகங்களின் பங்கேற்பை அதிகரிக்க, தொடக்கத் திட்டங்கள் கண்டறியப்பட்டன.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் HCL Samuday திட்டத்தின் மூலம் 132 தொடக்கப் பள்ளிகளில் சிறந்த கற்றலுக்காக டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் கற்றலுக்காக 20 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

58 கிராம ஊராட்சிகளில் தொற்றாத நோய்களுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் மேலாண்மை செய்யப்பட்டுள்ளன. 5 கிராம அளவிலான தையல் மையங்களில் தையல் இயந்திரங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள 41 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

HCL Samuday உத்தரப்பிரதேச மாநிலம், ஹார்டோய் மாவட்டத்தின் 11 பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் 524 கிராம ஊராட்சிகளில் 2,136 கிராமங்களில் வசிக்கும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றி வருகிறது.

HCL Samuday மிகவும் அத்தியாவசியமான சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கிட அரசுடன் இணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமுதாய அமைப்புகளுடன் ஈடுபடுவதன் மூலம் சிறப்பான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. மேலும், வளர்ச்சித் திட்டங்களில் உள்ளூர் சமூகங்களைப் பொறுப்பேற்க தூண்டுகோலாகவும் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: ஜேசிபி இயந்திரம் சிறைப்பிடிப்பு - பெண்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.