ETV Bharat / state

அதிமுகவில் புதிய அணியா? சி.வி.சண்முகம் செயலால் அதிர்ச்சி!

author img

By

Published : Dec 24, 2022, 3:30 PM IST

Etv Bharat
Etv Bharat

எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சி.வி.சண்முகம் தனியாக சென்று அஞ்சலி செலுத்திய நிகழ்வு அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அதிமுக நிறுவனத் தலைவரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் (Dr MGR Memorial) இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா என மூன்று அணிகளாக மரியாதை செலுத்தினர். இதில் முதலில் ஈபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி ஏற்று, எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஓபிஎஸ் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சரும், ஈபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமாக வலம் வரும் சி.வி.சண்முகம், தனியாக தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற போராட்டத்தில், "பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்க உள்ளது" என சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதற்கு அண்ணாமலை, "சி.வி சண்முகம் எப்போது பாஜகவில் இணைந்தார். பாஜகவின் கூட்டணி குறித்து அவர் எப்படி முடிவு எடுக்க முடியும்" என கிண்டலாக பதில் அளித்திருந்தார்.

இதனையடுத்து அதிமுகவில் இருந்து பாஜக கூட்டணி விலகுவதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும்" எனக் கூறியிருந்தார். இதனால், பாஜகவுக்கு எதிராக பேச வேண்டாம் என சி.வி.சண்முகத்திற்கு ஈபிஎஸ் அறிவுரை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருந்ததாகவும் பேசப்பட்டது. மேலும், எம்ஜிஆர் நினைவு நாளில் தனியாக தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்திய நிகழ்வு அதிமுகவில் மற்றொரு அணி உருவாகியுள்ளதா? என்று பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ’திமுகவை வேரோடு வீழ்த்திக் காட்டுவோம்’ - ஈபிஎஸ் தரப்பு உறுதிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.